ஞாயிறு, 19 ஜனவரி, 2014

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-17: பின்லேடன் அனுப்பிய கடிதம்

அமெரிக்கா மற்றும் கனடாவில் அல்-ஜசீராவுக்கு 2 லட்சம் சந்தாதாரர்கள் இருந்தனர். இவர்கள் அல்-ஜசீரா உள்பட 7 அரபு மொழி அலைவரிசைகளைப் பார்க்க மாதம் 25 டொலர்களை செலுத்தி வந்தனர். இந்த எண்ணிக்கை..

அத்தியாயம் 17

பலஸ்தீன பிரச்னையால் அல்-ஜசீராவின் புகழ் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்தது. இதன் விளையாக கத்தார் நாடும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. எரிவாயு எடுப்பதில் மட்டுமே முக்கியத்துவம் பெற்றிருந்த கத்தார், அமைதி நடவடிக்கைகளிலும் முக்கியப் பங்காற்றத் தொடங்கியது.



இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கத்தார் நாடு, தனது மீடியா ஆதிக்கத்தை வளர்த்துக் கொள்ளத் தொடங்கியது. அல் ஜசீரா தொலைக்காட்சியின் உதவியுடன் முதல் திரைப்பட விழாவை கத்தார் நாடு நடத்தியது.

அல்-ஜசீரா தொலைக்காட்சியின் தோகா பிரிவில் 350 ஊழியர்கள் மற்றும் சர்வதேசச் செய்தியாளர்களும் பணி புரிந்து வந்தனர். இதை மேலும் விரிவுபடுத்த அல்-ஜசீரா முடிவு செய்தது.

மார்ச் மாதத்தில் அல்-ஜசீரா விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளத் துவங்கியது. குறும்படம் (டாகுமெண்டரி) மற்றும் பொருளாதாரச் செய்திகளுக்குத் தனித்தனி அலைவரிசைகளைத் துவங்கத் திட்டமிட்டுள்ளதாக அல்-ஜசீரா அறிவித்தது.

24 மணி நேர ஒளிபரப்பைக் கொண்டதாக இந்த அலைவரிசைகள் அமையும் என்று தெரிவிக்கப்பட்டது. மே மாதத்தில் வணிகம் தொடர்பான செய்திச் சேவைக்காக அல்-ஜசீராவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சி.என்.பி.சி. தொலைக்காட்சி அறிவித்தது.

ஜூன் மாதத்தில் அல்-ஜசீராவின் தொலைக்காட்சி அலைவரிசை பிரித்தானியாவில் தனது சோதனை ஒளிபரப்பைத் துவங்கியது. ஐரோப்பாவில் உள்ள மற்ற சந்தைகளுக்குச் செல்லும் முன்னர், பிரித்தானிய நாட்டில் உள்ள அரபு மொழி பேசும் 4 லட்சம் மக்களைக் கருத்தில் கொண்டு ஸ்கை டிஜிட்டல் மூலம் சந்தாதாரர்களுக்கான ஒளிபரப்பாக இதை அமைக்க அல்-ஜசீரா திட்டமிட்டது.

இந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பை உடனடியாக துவங்கும் வகையில் பிரித்தானிய அரபு சமுதாயத்தினருக்கு அல்-ஜசீரா நேரடியாக இமெயில்களை அனுப்பி பிரசாரம் மேற்கொள்ளத் தொடங்கியது.

விளம்பரங்கள், நிகழ்ச்சிகள் விற்பனை மற்றும் கேபிள் சந்தா போன்றவை இணைந்து வருமானத்தைத் தந்தாலும், அல்-ஜசீராவுக்கு செலவை விட வருமானம் அதிகமானதாக இல்லை. இதற்கு சௌதி அரசாங்கத்தின் தடையும் ஒரு காரணம். சௌதி அரசாங்கம் அல்-ஜசீராவுடன் தங்களது விளம்பரதாரர்கள் வர்த்தகத் தொடர்பு கொள்வதைத் தொடர்ந்து தடுத்து வந்தது.

ஆகஸ்ட் மாதம் அல்-ஜசீராவுக்கு சௌதியைச் சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் இருந்து பெரியதொரு விளம்பர ஒப்பந்தம் கிடைத்தது. இந்த ஒப்பந்தம் கிடைத்த சில நாட்களிலேயே அதற்கு அதிர்ச்சியும் காத்திருந்தது.

சுவீடன் நாட்டு டெலிகாம் உற்பத்தி நிறுவனமான எரிக்சன், தனது பல கோடி டாலர் விளம்பர ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டது.

எரிக்சன் நிறுவனத்தின் இந்த திடீர் மனமாற்றத்துக்குக் காரணம் சௌதி அரசாங்கம்தான் என அல்-ஜசீராவின் மார்கெட்டிங் பிரிவுத் தலைவர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். சௌதி அரசாங்கத்தின் இது போன்ற நடவடிக்கைகளால் அல்-ஜசீரா அயர்ந்து போய்விடவில்லை. இதன் பின்னரும் தனது விரிவாக்க நடவடிக்கையை தொடர்ந்தது.

மற்றொரு பக்கமாக, வட அமெரிக்காவில் அல்-ஜசீராவின் நடவடிக்கைகள் விரிவாக்கப்பட்டன.

அமெரிக்கா மற்றும் கனடாவில் அல்-ஜசீராவுக்கு 2 லட்சம் சந்தாதாரர்கள் இருந்தனர். இவர்கள் அல்-ஜசீரா உள்பட 7 அரபு மொழி அலைவரிசைகளைப் பார்க்க மாதம் 25 டொலர்களை செலுத்தி வந்தனர். இந்த எண்ணிக்கை ஒரே வாரத்தில் மேலும் அதிகரித்தது. மேலும் 2500 சந்தாதாரர்கள் சேர்ந்தனர்.

அமெரிக்காவில் தனது பார்வையாளர்களை அதிகரிக்கச் செய்யும் வகையில் அல்-ஜசீரா, வாஷிங்டனிலும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளை அதிகரித்தது.

இந்நிலையில், 2001-ம் ஆண்டு ஜனவரியில், அல்-ஜசீரா அரபு மொழியில் வெப்சைட்டை துவங்கியது.

2001-ம் ஆண்டு ஜனவரி மாதத்ததில் அல்-ஜசீரா அரபு மொழி வெப்சைட்டை துவங்கியது.

இந்த இணையத் தளத்தில் பேச்சுப் பதிவுகள், விவாத மேடைகளின் முழு பதிவுகள் ஆகியவற்றுடன் விவாத மேடைகளில் அலசப்படும் விடயங்கள் குறித்த மக்களின் கருத்துகளும் இடம் பெற்றன.

மே மாதத்தில் 3 லட்சம் பேர் அல்-ஜசீரா வெப்சைட் பக்கத்தைப் பார்த்திருந்தனர். இந்த வெப்சைட்டை பார்த்தவர்களில் சுமார் 25 சதவீதம் பேர் அமெரிக்க வாழ் அரேபியர்கள். அடுத்த ஏழு மாதங்களில் அல்-ஜசீரா வெப்சைட்டை பார்ப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. அந்த வெப்சைட்டை 90 லட்சம் பேர் பார்த்திருந்தனர். 4 கோடியே 60 லட்சம் முறை பக்கங்களைப் பார்த்திருந்தனர்.

ஆகஸ்ட் மாதம் வால் ஸ்டீரீட் ஜர்னல் பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளியானது. அதில் அமெரிக்காவில் உள்ள சர்வர்கள் மூலம் இயங்கும் தீவிரவாத ஆதரவு வெப்சைட்களை, அமெரிக்க அரசு முடக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

அந்தக் கட்டுரையை இஸ்ரேலிய ஆதரவு அமெரிக்கரான டேனியல் பைப்ஸ், தீவிரவாத நடவடிக்கைகள் ஆய்வாளரான எமர்சன் ஆகியோர் இணைந்து எழுதியிருந்தனர்.

இந்தக் கட்டுரை வெளியான சில வாரங்களில் அமெரிக்க உளவுத்துறை எப்.பி.ஐ. உருவாக்கிய வடக்கு டெக்சாஸ் தீவிரவாத தடுப்பு அமைப்பு, அமெரிக்க சுங்கத் துறை, வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்து டல்லாசில் இருந்து இயங்கிய அல்-ஜசீராவின் இணைய தள வெப்ஹோஸ்ட்டிங் அலுவலகத்தில் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.

எதற்காக இந்தச் சோதனை நடத்தப்பட்டது என்பதை எப்.பி.ஐ. வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

அதிகாரிகள் மூன்று நாட்கள் பைல்களை பிரதியெடுத்தனர். ஒரு விடயம் தொடர்பாக இரண்டாண்டு விசாரணையின் ஒரு பகுதிதான் இது என்று மட்டுமே எப்.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அல் ஜசீராவின் வெட்சைப் மூடப்பட்டது.

இதே வெப்ஹோஸ்ட்டை பகிர்ந்து பயன்படுத்தி வந்த அரபு மொழி பத்திரிகைகள் உள்பட மேலும் 500 வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட்டனர்.

வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் ஆதரவாளர்கள்தான் அல்-ஜசீரா வெப்சைட் மூடப்பட்டதற்குக் காரணம் என சில அமெரிக்க இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையாகக் கருத்தப்பட்ட வெப்சைட் மூடலை அமெரிக்க அதிகாரிகள் மறுத்தனர். “குற்ற விசாரணை தொடர்பான தேடுதல் வாரண்ட்டைத்தான் நாங்கள் செயல்படுத்தினோம். இஸ்லாம், பலஸ்தீனம் அல்லது மத்திய கிழக்குப் பிரச்சினைக்கு எதிரான நடவடிக்கை இதில் ஏதும் இல்லை” என டல்லாஸ் எப்.பி.ஐ. அலுவலகப் பெண் செய்தித் தொடர்பாளர் லோரி பெய்லி தெரிவித்தார்.

அல் ஜசீரா வெப்சைட்டை வெளியிட்ட அந்த வெப்ஹோஸ்ட் அமைப்பு, மேலும் சில அரேபிய, இஸ்லாமிய கருத்துகளைக் கொண்ட வெப்சைட்களையும் வைத்திருந்தது. ஜெருசலம் பலஸ்தீன்.காம், இஸ்லாமிக் பண்ட்.காம், ஐ லவ் பலஸ்தீன்.நெட் போன்ற வெப்சைட்களும் இந்த வெப்ஹோஸ்ட்டில் இருந்தன என்பதுதான், எப்.பி.ஐ.யின் நடவடிக்கைக்கு சாதகமானதாக அமைந்தது.

செப்.11, அமெரிக்காவில் புகழ் பெற்ற உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் விமானம் மூலம் மோதி தகர்க்கப்பட்டன. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளி ஒசாமா பின்லேடன்தான் என அமெரிக்க நிர்வாகம் உடனேயே கூறியது.

செப்டெம்பர் 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ‘ஷேக் ஒசாமா பின் லேடன்’ என்று கையெழுத்திடப்பட்ட கடிதம் அல்-ஜசீராவுக்கு வந்தது.

பேக்ஸ் எந்திரத்தில் வந்த அந்த கடிதத்தில், இரட்டைக் கோபுரத் தாக்குதலில் தனக்குத் தொடர்பில்லை என்று பின்லேடன் மறுத்திருந்தார். “நான் ஆப்கனிஸ்தானில் இருக்கிறேன். ஆப்கனை ஆளும் தலிபான் ஆட்சியின் சட்டதிட்டங்களை மதிக்கிறேன். இது போன்ற தாக்குதல்களை தலிபான் ஆட்சி அனுமதிப்பதில்லை” என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

ஆனால் அமெரிக்க அரசு பின்லேடனின் மறுப்பை ஏற்கவில்லை.

தாக்குதல் நடந்தபோது கேம்ப் டேவிட்டில் ஓய்வில் இருந்த அமெரிக்க அதிபர் புஷ், உடனடியாக வாஷிங்டன் திரும்பினார். வெள்ளை மாளிகையின் தெற்குப் பகுதியில் புல்வெளியில் நிருபர்களை சந்தித்த புஷ், “இந்தத் தாக்குதலுக்கு முக்கியக் காரணம் பின்லேடன்தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. அமெரிக்காவுக்கு எதிராக போர் தொடுத்துள்ளவர்கள் மிகப்பெரிய தவறைச் செய்து விட்டனர். எங்களை உசுப்பி விட்டுவிட்டனர். நாங்கள் தீர்மானித்து விட்டோம். அவர்களைக் கண்டுபிடிப்போம், விரட்டியடிப்போம், வீழ்த்துவோம்” என்றார்.

தொடரும்..


விறுவிறுப்பு இணையம்


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல