ஞாயிறு, 19 ஜனவரி, 2014

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-20: மற்றைய மீடியா கோப தாக்குதல்கள்!

அத்தியாயம் 20

செப்டெம்பர் 16-ம் தேதி வெள்ளை மாளிகையின் புல் தரையில் அமெரிக்க ஜனாதிபதி புஷ் பத்திரிகையாளர்ளைச் சந்தித்தார். அப்போது உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்த ஜனாதிபதி புஷ், அமெரிக்காவின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது பதிலடி தருவதற்குத் தாங்கள் தயாராக இருப்பதை உலகத்துக்கு உணர்த்த நினைத்தார். அப்போது அவர் கூறிய ‘குரூசேட்’ (Crusade) என்ற வார்த்தை, அதன் பின்னர் சர்வதேச அளவில் முக்கியத்துவத்தைப் பெற்றது.



குரூசேட் என்பது ஒருவித கிறிஸ்தவ மத ரீதியிலான போர். ஜெருசலேமிலும், அதற்கு அருகிலுள்ள பகுதிகளிலும், கிறிஸ்தவ மதத்தை நிலை நிறுத்துவதற்காக செய்யப்பட்ட பழைய காலப் போர்.

தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை, “இது புதிய பிசாசு, அமெரிக்க மக்கள் இவர்களது செயலைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசித்தள்ளிய ஜனாதிபதி புஷ், இறுதியில் தீவிரவாதத்துக்கு எதிரான தங்களது போராட்டத்தை ‘குரூசேட்’ என தெரிவித்த விதம், உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பழைய காலத்தில், கிறிஸ்தவ மத ரீதியிலான போரில் அமெரிக்கா பங்கேற்றதில்லை. அந்த விதமான போரில் மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் பங்கு உண்டு. தங்களது புனித பூமியை மீட்பதற்காக கிறிஸ்தவ ராணுவம் செய்த மதப்போர் என்ற வார்த்தையே அமெரிக்க ஜனாதிபதியும் பயன்படுத்தியதால் அதன் முக்கியத்துவம் மேலும் அதிகரித்தது.

அமெரிக்க ஜனாதிபதி கூறிய இந்த சொல், அல்-ஜசீரா உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய, அரபு ஊடகங்களில் விவாதப் பொருளானது.

புஷ் கூறிய மதப் போருக்கு பதிலடி, பின் லேடனிடம் இந்து மற்றொரு அறிக்கையாக பேக்ஸில் அல்-காய்தா தொலைக்காட்சி அலுவலகத்துக்கு வந்தது.

“புதிய யூத மதப்போர் அமெரிக்க ஜனாதிபதி புஷ்சின் தலைமையில் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கனிஸ்தானில் அமெரிக்க படை ஊடுருவாமல் தடுக்க பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் சகோதரர்கள் தங்களால் இயன்ற முயற்சிகளை முழுமையாக எடுக்க வேண்டும்” என்று அதில் கூறியிருந்த பின்லேடன், குரான் வாசகத்துடன் அறிக்கையை முடித்திருந்தார்.

“கடவுள் உங்களுக்கு உதவினால், உங்களை யாரும் மீற முடியாது. அவர் உங்களை கைவிட்டால், அதன் பின்னர் உங்களுக்கு யாரும் உதவ முடியாது” என்ற பொருள்பட இருந்த அந்த குரான் வாசகத்தை தனது முத்திரை வாசகமாக அறிக்கையில் குறிப்பிட்டு நிறைவு செய்திருந்தார் பின்லேடன்.

தீவிரவாதி என்று அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட ஒசாமா பின்லேடன், தனது அறிக்கையை அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு அனுப்பினார். அல்-ஜசீரா தொலைக்காட்சி அதனை முழுமையாக ஒளிபரப்பியதும், உலகளவில் ஊடகங்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஒசாமா பின்லேடன் தனது கருத்துகளை வெளியுலகுக்குத் தெரிவிக்கத் தேர்ந்தெடுத்த ஒரே தொலைக்காட்சி அல் ஜசீராதான் என்பது தெளிவாகத் தெரிந்தது.

“உலகின் தேடப்படும் மனிதர்” என்று டைம் சஞ்சிகையால் அப்போது வர்ணிக்கப்பட்ட ஒசாமா பின்லேடன், அமெரிக்க இரட்டைக் கோபுர தகர்ப்புக்கு மூளை என்று அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்டாலும், அவர் என்ன சொல்கிறார் என்பதை கேட்க உலகமே ஆர்வமாக இருந்தது. ஆப்கனிஸ்தானில் மறைவிடத்தில் இருந்த ஒசாமா பின் லேடனின் குரலை உலகுக்கு வெளிப்படுத்த ஒரே வழியாக, அல்-ஜசீரா தொலைக்காட்சி மட்டுமே இருந்தது.

அல்-ஜசீராவின் இந்த ஒளிபரப்பு, பின்லேடனுக்கும் அல்-ஜசீராவுக்கும் உள்ள தொடர்பு குறித்து பல்வேறு யூகங்களை ஊடகங்கள் மத்தியில் விதைத்தது.

அல்-ஜசீராவுக்கு அனுப்பிய பேக்ஸை பின்லேடனே நேரடியாக அனுப்பியிருக்க முடியாது. அது அவரது மறைவிடத்தை எளிதாக காட்டிக் கொடுத்துவிடும் என்பது தெரிந்திருந்ததால், பின்லேடனது அறிக்கை அல்-ஜசீராவுக்கு எப்படி வந்தது என்று பல்வேறு யூகங்களை ஊடகங்கள் வெளியிட்டன.

பின்லேடன் அல்-ஜசீராவுக்கு பிரத்தியேகமாக அறிக்கை அனுப்பியதற்கும் ஒரு பின்னணி இருந்தது.

இந்தச் சம்பவத்துக்கு முன்னர் ஒரு சில அரபு பத்திரிகைகளுக்கு ஒசமா பின்லேடனிடம் இருந்து பேக்ஸில் அறிக்கைகள் வந்துள்ளன. சில பத்திரிகைகள் அவற்றுக்கு முக்கியத்துவம் தராமல், பத்தோடு பதினொன்றாக பிரசுரித்தன. மற்ற அரபு பத்திரிகைகளோ பின்லேடனின் படத்தையோ, பேக்ஸ் அறிக்கையையோ ஒருபோதும் பிரசுரித்ததில்லை.

அமெரிக்காவுக்கு எதிரான தீவிரவாதி என்று கருதப்படுபவருடன் தொடர்பு வைத்திருந்தால் அது தங்களது பத்திரிகையைப் பாதிக்கும் என்ற கவலையால் அவர்கள் பின்லேடனின் அறிக்கைகளைக் குப்பைத் தொட்டிக்கு அனுப்பி விட்டனர்.

அல்-ஜசீரா தொலைக்காட்சி தொடங்கப்படுவதற்கு முன்னர் பின்லேடன், அப்போது செயல்பட்டு வந்த மற்ற அரபு தொலைக்காட்சிகளுக்குத்தான் தனது வீடியோ காட்சிகளை அனுப்பி வந்தார். அவற்றை அந்த தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாமல் முழுமையாகப் புறக்கணிப்பு செய்து வந்தன.

அரபு நாடுகளின் ஒளிபரப்புக் கழகமும், ஒசாமா பின்லேடனின் பேட்டியை ஒளிபரப்ப வேண்டாம் என தனது உறுப்பு நாடுகளின் தொலைக்காட்சிகளை கேட்டுக் கொண்டிருந்தது. இதனை மதித்து, பின்லேடன் அனுப்பும் வீடியோ காட்சிகளை அரபு தொலைக்காட்சிகள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டன.

அல்-ஜசீரா தொலைக்காட்சி துவங்கப்பட்ட பின்னர், பின்லேடனின் அறிக்கைகளை அது புறக்கணிக்காமல் தைரியமாக ஒளிபரப்புச் செய்தது. பின்லேடனின் அறிக்கைகள அல்-ஜசீராவில் ஒளிபரப்பப்பட்டதைக் கூட, அவற்றைப் புறக்கணித்து வந்த அரபு பத்திரிகைளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அல்-ஜசீரா ஒளிபரப்பும் பின்லேடனின் அறிக்கைகள் போலியானவை என அவை குற்றம் சாட்டின.

லண்டனில் இருந்து வெளியான சவுதி நாட்டைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான ‘அல் ஷார்க் அல் அவ்சாட்’ என்ற பத்திரிகை, ‘போலி அறிக்கை மீடியா’ என்று அல்-ஜசீராவை நேரடியாகக் கிண்டல் செய்தது. பலஸ்தீன மற்றும் சிரியா நாட்டு அடிப்படைவாதிகளால் நடத்தப்பட்ட சில பிரிட்டிஷ் ‘டாபுலாய்ட்’ பத்திரிகைகளும், அல்-ஜசீராவின் மீது பாயத் தயங்கவில்லை.

பிரிட்டனின் டெய்லி டெலிகிராப் பத்திரிகையோ இவற்றில் இருந்து ஒரு படி மேலே போய், அல்-ஜசீராவை ‘பின்லேடன் டிவி’ என்று வர்ணித்தது.

அக்டோபர் 4-ம் தேதி வெளியான ‘நியூயார்க் போஸ்ட்’ பத்திரிகை, ‘பின்லேடன் விரும்பும் தொலைக்காட்சி’ என்று அல்-ஜசீராவை பற்றி தலைப்புச் செய்தியே வெளியிட்டிருந்தது. அதில் வெளியிடப்பட்டிருந்த கட்டுரையில் பின்லேடன் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறப்பட்ட வார்த்தைகள் அப்படியே தரப்பட்டிருந்தன.

“நான் தொலைக்காட்சி பார்ப்பதில்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், அவர்களுக்கு என்ன தெரியும்? வெளியுலக தகவல்களை எப்போது தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோனோ, அப்போதெல்லாம் அரபு உலகின் செய்தித் தொலைக்காட்சியான அல்-ஜசீராவை நான் பார்க்கிறேன். எனது அறிக்கைகளையும் அவர்களுக்கு பேக்ஸ் செய்கிறேன்” என்று பின்லேடன் கூறியிருந்ததை ‘நியூயார்க் போஸ்ட்’ மேற்கோள் காட்டியிருந்தது.

அல்-ஜசீரா அலுவலகத்துக்கு பின்லேடனின் பேக்ஸ் வந்த சில நாட்களில், மற்றொரு பேக்ஸ் வந்தது. அதுவும் ஒரு அறிக்கை. அந்த அறிக்கை தலிபான் தலைவர் முல்லா முகமது ஓமரின் பெயரில் வந்திருந்தது.

அதில் இருந்த விஷயம் சிக்கலானது. அதை அப்படியே ஒளிபரப்பினால், சிக்கல் ஏற்படும் என அல்-ஜசீரா தலைமைக்கு புரிந்தது. அப்படி என்னதான் இருந்தது தலிபான் தலைவர் முல்லா முகமது ஓமரின் அறிக்கையில்?

(தொடரும்)


விறுவிறுப்பு இணையம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல