“கய்ரோவில் உள்ள இசையமைப்பாளர்கள் சங்கம், அல்-ஜசீராவுக்கு இசை நிகழ்ச்சிகளை கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எகிப்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என அரசை....”
அத்தியாயம் 07
எகிப்தில் மக்கள் கொந்தளிப்பு துவங்கிய நாட்களில், அது அல்-ஜசீரா டி.வி. சேனலால் மக்கள் மத்தியில் பிரபல்யமானது என்பது மறுக்க முடியாத உண்மை. அல்-ஜசீராவின் அரசியல் விமர்சன நிகழ்ச்சிகளில் தோன்றிய சிறப்பு விருந்தினர்கள் அனைவரும், அரேபியர்களுக்கு எதிரான, எகிப்திய அரசின் நடவடிக்கைகள் பற்றி விமர்சித்தனர்.
அதே நேரத்தில் முபாரக் ஆதரவாளர்கள், அல்-ஜசீராவுக்கு எதிரான ஊடகப் பிரசாரத்தை தீவிரப்படுத்துவதன் மூலமும், அரசு அதிகாரங்களை பயன்படுத்துவதன் மூலமும், தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கையுடன் இருந்தனர்.
அரசின் கட்டுப்பாட்டில் சில எகிப்திய பத்திரிகைகள் இருந்தன. அவை, மக்கள் நம்பிக்கையை இழந்திருந்தன. சர்க்குலேஷன் சரிந்திருந்தது. இந்தப் பத்திரிகைகள், அல்-ஜசீரா மீது புழுதி வீசத் துவங்கின. இந்தப் பத்திரிகைகளில் ஒன்று, அல்-ஜசீராவின் செய்தி தொகுப்பாளர் ஒருவரின் உருவத்தை, யூதர்கள் யார்முல்காஸ் உடையை அணிந்திருப்பது போன்று கார்ட்டூன் படமாக வெளியிட்டது.
எகிப்திய தகவல் துறை அமைச்சர், “அரபு மக்களின் ஒற்றுமையை அல்-ஜசீரா சீர்குலைக்கிறது” என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.
“எகிப்துக்கு எதிரான அல்-ஜசீரா நடத்தி வரும் பிரசாரம் தவறானது. அரபு சமூகத்தை விஷமாக்கும் வகையில் அல்-ஜசீராவின் பிரசாரம் உள்ளது. அல்-ஜசீராவை தூக்கி எறிய வேண்டும். அல்-ஜசீராவின் படப்பிடிப்பு அரங்கங்கள், செயற்கைக்கோளுக்கு ஒளிபரப்பை அனுப்புதல் என அல்-ஜசீராவின் எந்தவொரு நடவடிக்கையும் எகிப்தில் நடக்காதபடி தடுத்து நிறுத்துவேன்” என்று அரசு தொலைக்காட்சியில் அமைச்சர் கூறினார்.
இதையடுத்து, எகிப்திய அரசு தமது அதிகாரபூர்வ உத்தரவை பிறப்பித்தது.
“அடுத்த 48 மணி நேரத்துக்குள் அல்-ஜசீரா தொலைக்காட்சி தனது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அரசு, அல்-ஜசீரா எகிப்தில் உள்ள படப்பிடிப்பு அரங்கங்களை பயன்படுத்துவதையும், செயற்கைக் கோளுக்கு நிகழ்ச்சிகளை அனுப்புவதையும் தடை செய்யும்.
அல்-ஜசீரா செய்தியாளர்கள் எகிப்தின் எந்த இடத்திலும் பணியாற்றுவதும் தடுக்கப்படும்” என்று எகிப்து அரசாங்கம் பகிரங்க எச்சரிக்கையும் விடுத்தது.
வழக்கம் போல், எகிப்திய அரசின் இந்த எச்சரிக்கையும் அல்-ஜசீரா கண்டுகொள்ளவில்லை.
அரசியல் விவாத நிகழ்ச்சிகளில் எகிப்திய அரசுக்கு எதிரானவர்களின் குரல்கள் உரக்க ஒலிக்கத் தொடங்கின. 48 மணி நேரம் கடந்தும் அல்-ஜசீரா தடை செய்யப்படவில்லை. ஆனால், அரசு வேறு விதமாக காய் நகர்த்தியது.
அரசியல் விவாத நிகழ்ச்சியை நடத்திய டாக்டர் பைசல் அல்-குவாசிமின் இளைய சகோதரான பாப் பாடகர் மக்த் அல்-குவாசிம்மை எகிப்து பொலீசார் அதிரடியாக நள்ளிரவில் கைது செய்து, ஜோர்தானுக்கு நாடு கடத்தினர்.
இதை நியாயப்படுத்தும் வகையில் எகிப்திய அரசாங்க ஆதரவு தினசரி பத்திரிகை அல்-அக்பர், ஒரு செய்தியை வெளியிட்டது.
“கய்ரோவில் உள்ள இசையமைப்பாளர்கள் சங்கம், அல்-ஜசீராவுக்கு இசை நிகழ்ச்சிகளை கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எகிப்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என அரசை கேட்டுக் கொண்டது. அந்த வேண்டுகோளின்படி, பாப் பாடகர் மக்த் அல்-குவாசிம் நாடு கடத்தப்பட்டார்” என்றது அல்-அக்பர் வெளியிட்ட செய்தி!
எகிப்து தகவல் துறை அமைச்சர் இதற்கு ஒரு படி மேலே போய், “சந்தேகத்துக்கு உரிய தொலைக்காட்சி அலைவரிசையான அல்-ஜசீராவுக்கு, இஸ்ரேலிய உளவுத்துறை மில்லியன் கணக்கில் பணமும் கொடுத்து, ரகசிய உத்தரவு ஒன்றையும் போட்டுள்ளது. அரசியல் ரீதியாக மட்டுமன்றி, இசைக் கலைஞர்கள், பாடகர்கள் மூலமும் எகிப்து மற்றும் அரபு உலகின் நன்மதிப்பை குலைக்க வேண்டும் என்பதுதான் அந்த ரகசிய உத்தரவு” என்று அறிவித்தார்.
இதெல்லாம் நடந்தபின், நாடு கடத்தப்பட்ட பாப் பாடகர் மக்த் அல்-குவாசிம், 3 மாதங்களுக்குப் பின்னர் எகிப்து திரும்ப அனுமதிக்கப்பட்டதுதான் இறுதியில் எகிப்து அரசு அடித்த பல்டி.
எகிப்தில் நிலைமை அப்படியிருக்க, பலஸ்தீனத்தில் நான்கு வாரங்களில் நடந்த மோதல்களில் 130 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அரேபியர்கள். மோதல்கள் ஓய்வதற்கான அறிகுறி ஏதும் தெரியவில்லை.
அரபு தெரு ஒன்றில் சண்டையால் பாதிக்கப்பட்ட பலஸ்தீனிய மக்களுக்கு இரத்தம் கொடுக்க ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த மோதல்கள் பலஸ்தீனத்திலும் மக்களை, மனதால் ஒன்றுபடுத்தியிருந்தது.
பலஸ்தீனத்தில் இயங்கி வரும் பதா, ஹமாஸ், பலஸ்தீன விடுதலை ஜனநாயக முன்னணி, பலஸ்தீன விடுதலை இயக்கம் மற்றும் தீவிரவாத இயக்கங்கள், தமக்கு இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகளைக் கைவிட்டு, ஒற்றுமையாகின.
இந்தக் கட்டத்தில் அமெரிக்காவும் காட்சிக்குள் வந்தது. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனின், ஷார்ம் எல் ஷேக் என்ற இடத்தில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன தலைவர்களை சந்திக்க வைத்தார். அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.
ஆனால், பலஸ்தீன தீவிரவாத இயக்கங்கள், இஸ்ரேலுடன் இருந்துவந்த மோதல் போக்கைக் கைவிட ஒப்புக் கொள்ளவில்லை.
இதன் காரணமாக அவசர சமாதான பேச்சுவார்த்தைகள் பிரச்னைகளை தீர்க்க உதவாது என்பது தெளிவாக தெரிந்தது. பேச்சுவார்த்தைகளில் கஷ்டப்பட்டு ஏற்படுத்தப்படும் உடன்பாடுகள், ஒப்பந்தங்கள் போன்றவை புதையுண்டு போகும் என்பதும் தெளிவானது.
அரபு நாடுகளில், இந்த பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
இஸ்ரேலுடன் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் தங்களை இணைத்துக் கொண்ட அரபு நாடுகளான மொராக்கோ, ஜோர்தான், டுனிஷியா, சவுதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகள், உள்நாட்டில் ஏற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக, அதில் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நாடுகள் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வந்தது.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவித்து அரபு நாடுகளில் நடந்த ஆர்ப்பாட்டங்களால் 21 அமெரிக்க தூதரகங்களை தாற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. மொராக்கோவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ரோடுகளில் திரண்டனர். சிறிய நாடான ஓமனில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர்.
20,000 பாகிஸ்தான் முஸ்லிம்கள், இஸ்ரேலுக்கு எதிராக ‘ஜிகாத்’ என்ற புனிதப்போர் நடத்துவதற்கு திரண்டுள்ளதாக பாகிஸ்தான் பத்திரிகைகள் தெரிவித்தன.
ஜோர்தான் நாட்டில் ஜோர்தான் – இஸ்ரேல் இணைப்பு பாலங்களில் ஒன்றை கடக்க முயன்ற 30,000 பலஸ்தீனியர்களுக்கும் பொலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஈராக் படைகள் 1991-ல் குவைத்தில் இருந்து ஈராக் திரும்பிய பின்னர், சதாம் ஹூசேனை சந்தித்த முதல் அராபிய தலைவரான ஜோர்தான் பிரதமர், இந்த பிரச்னையால் பெரும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருந்தது.
வளைகுடா நாடுகளான ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், கத்தார், குவைத், பக்ரைன், சவுதி அரேபியா ஆகியவற்றில் உள்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் அபாயம் உருவானது.
தொடரும்..
விறுவிறுப்பு இணையம்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக