ஞாயிறு, 19 ஜனவரி, 2014

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-14: அராபத் அலுவலகத்தில் வெறுப்பு!

அல்-ஜசீரா மீது அவர்களுக்கு இருந்த வெறுப்பு அப்போதுதான் தெரிந்தது. வாலித் அல்-ஒமாரியிடம் அராபத்தின் பாதுகாவலர்கள், கடுமையாக நடந்து கொண்டனர். “நீங்கள் விரும்பத்தகாதவர். இங்கிருந்து வெளியேறி...

அத்தியாயம் 14

அல்-ஜசீரா அலுவலகத்துக்குள் துப்பாக்கிகள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு குண்டர் படை நுழைந்தது. அவர்கள் அனைவரும் பலஸ்தீன அதிபர் யாசர் அராபத்தின் ‘பதா’ அமைப்பைச் சேர்ந்தவர்கள்.



“அலுவலகத்தைப் பூட்டா விட்டால், உடைத்துத் தரை மட்டமாக்குவோம்” என்று அவர்கள் அல்-ஒமாரியை மிரட்டினர். அராபத்தின் அலுவலக அதிகாரிகள் சிலரும் வந்ததால், அவர்களது கோரிக்கையை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலை உருவானது.

லெபனான் போர் தொடர்பான குறும்படத் தொடரில் பலஸ்தீன நிர்வாகத்தின் லஞ்ச ஊழல்களை அல்-ஜசீரா வெளிச்சமிட்டதால், அதன் ஒளிபரப்பை முடக்க வேண்டும் என்பதே, பலஸ்தீன அதிகாரிகளின் திட்டமாக இருந்தது. அந்த தொடர் எப்படி வகையில் ஒளிபரப்பாகிறது என்பது குறித்த அவர்களது அறியாமையின் வெளிப்பாடுதான் இந்தத் திட்டம்.

அல்-ஜசீரா ஊழியர்கள் “எமது ரமல்லா அலுவலகத்தில் இருந்து இந்த தொடர் ஒளிபரப்பாவதில்லை. லெபனான் போர் தொடர்பான குறும்படத் தொடர், கத்தார் நாட்டிலிருந்து ஒளிபரப்பாகிறது. அந்த தொடருக்கும் அல்-ஜசீராவின் ரமல்லா அலுவலகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என பலஸ்தீன அதிகாரிகளிடம் விளக்க முயன்றனர்.

ஆயுதங்களுடன் வந்திருந்த பலஸ்தீன பாதுகாப்பு அதிகாரிகள் அல்-ஜசீரா ஊழியர்களின் பதிலை ஏற்க மறுத்தனர். இதனால், அல்-ஜசீராவின் ரமல்லா பிரிவை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அல்-ஜசீராவின் ரமல்லா பிரிவு தாற்காலிகமாக மேற்கு ஜெருசலத்தில் இருந்து செயல்படத் தொடங்கியது.

“அராபத் சம்பந்தப்பட்ட காட்சிகள் அடங்கிய டிரெய்லரை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அல்-ஜசீரா தொலைக்காட்சி மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்போதுதான் அல்-ஜசீராவின் ரமல்லா அலுவலகத்தை மீண்டும் திறக்க அனுமதிப்போம்” என்று பலஸ்தீன நிர்வாகம் கூறியதை ஏற்க மறுத்த அல்-ஜசீரா நிர்வாகம், மன்னிப்பு ஏதும் கேட்கவில்லை.

சர்ச்சைக்குரிய குறும்பட டிரெய்லரும் தொடர்ந்து அல்-ஜசீராவில் ஒளிபரப்பப்பட்டது. இதனால், 5 நாட்களுக்கு அல்-ஜசீராவின் ரமல்லா பிரிவு அலுவலகம் மூடிக் கிடந்தது.

அந்த நேரத்தில் பலஸ்தீன நிர்வாகம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சர்வதேச தரப்பில் இருந்து குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. சர்வதேச செய்தியாளர்கள் பலர் அல்-ஜசீராவின் பக்கத்தில் இருந்து பலஸ்தீன நிர்வாகத்துக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

நியூயோர்க்கில் இருந்து செயல்பட்டு வரும் அமைப்பான பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழு வெளியிட்ட அறிக்கையில், “அல்-ஜசீரா அலுவலகத்தை மூடியது, அதன் நிருபர்களுக்குத் தடைகளை விதித்தது போன்ற பலஸ்தீன அதிகாரிகளின் செயல், பத்திரிகைச் சுதந்திரத்துக்கு எதிரான செயல். தங்களது எண்ணங்களை வெளியிடும் உரிமையைத் தடுக்கும் விதத்திலும், சர்வதேசக் கோட்பாடுகளை மீறும் விதத்திலும் பலஸ்தீன அதிகாரிகளின் செயல் அமைந்துள்ளது” என்று கண்டனம் தெரிவித்தது.

அல்- ஜசீராவின் ரமல்லா அலுவலகம் மூடப்பட்ட சமயத்தில் பலஸ்தீன அதிபர் யாசர் அராபத் சவுதி அரேபியாவில் இருந்தார்.

இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவர் பலஸ்தீனம் திரும்பியதும், தன்னை வந்து சந்திக்குமாறு அல்-ஒமாரிக்கு பலஸ்தீன அதிகாரி அஷ்வாரி மூலம் தகவல் அனுப்பினார்.

மேற்கு ஜெருசலத்தில் இருந்த தாற்காலிக அலுவலகத்தில் இருந்து அல்-ஒமாரியை, அஷ்வாரி நேரில் சென்று காரில் அழைத்து வந்தார்.

அவர்கள் அராபத்தின் அலுவலக வளாகத்தில் நுழையும் போதே, அவர்களுக்காக அதிபர் அராபத் காத்திருக்கிறார் என்பது தெரிய வந்தது. கார் அராபத்தின் அலுவலக வளாகத்தில் நுழைந்து நின்றது. காரில் இருந்து அஷ்வாரி இறங்கினார். அல்-ஒமாரி அவரைப் பின்தொடர்ந்து இறங்க முயன்றார்.

அல்-ஜசீரா மீது அவர்களுக்கு இருந்த வெறுப்பு அப்போதுதான் தெரிந்தது.

வாலித் அல்-ஒமாரியிடம் அராபத்தின் பாதுகாவலர்கள், கடுமையாக நடந்து கொண்டனர். “நீங்கள் விரும்பத்தகாதவர். இங்கிருந்து வெளியேறி விடுங்கள், இங்கு நிற்காதீர்கள். நாங்கள் உங்களை சுட்டுக் கொல்வதற்கு முன் இங்கிருந்து ஓடிவிடுங்கள்” என்று எச்சரித்தனர்.

“அராபத் என்னுடன் பேச வேண்டும் என்று அழைத்ததால்தான் நான் இங்கு வந்தேன்” என்று அல்-ஒமாரி அவர்களிடம் விளக்கினார்.

ஆனால், அராபத்தின் பாதுகாவலர்கள், அவரை காரில் இருந்து இறங்க அனுமதிக்கவில்லை. பாதுகாவலர்களின் கடுமையினால் தொடர்ந்து நடந்தது என்ன? அராபத்தை அல் ஓமாரி சந்தித்தாரா?

தொடரும்..


விறுவிறுப்பு

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல