ஞாயிறு, 19 ஜனவரி, 2014

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-16: இரண்டு பக்கமும் இடி!

அபு மாசேன் பலஸ்தீன பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர், அல்-ஒமாரி அபு மாசேனுக்க ஆதரவாகச் செயல்படுவதாக அராபத் அலுவலகம் குற்றம்சாட்ட தொடங்கியது. இதற்கு எதிராக அல்-ஒமாரி மீது..

அத்தியாயம் 16

“எங்களது அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டதில் ஏதாவது பிரச்னை இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? அப்படி நினைத்தால், ஜனநாயக முறையில் பலஸ்தீனர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான அராபத்திடமே நேரடியாக கேட்கலாமே? அவரும் உங்கள் கேள்விக்கு மகிழ்ச்சியாக பதில் கூறுவார்” என்று சிறிதும் மரியாதை குலையாமல் அல்-ஒமாரி கூறிய பதிலுக்கு, அந்த பலஸ்தீன அதிகாரியால் எந்த எதிர் கேள்வியும் எழுப்ப முடியவில்லை.



இப்படியாக எல்லா விஷயத்திலும், இரண்டு பக்கமும் இடி வாங்கியது அல்-ஜசீராதான்.

பலஸ்தீனுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக அல்-ஜசீரா மீது அவ்வப்போது இஸ்ரேலியர்கள் குற்றம் சாட்டுவதும், பலஸ்தீன அதிகாரிகளுடன் அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு பிரச்னைகள் ஏற்படுவதும் நீண்ட காலமாக தொடர்ந்தது.

அபு மாசேன் பலஸ்தீன பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர், அல்-ஒமாரி அபு மாசேனுக்க ஆதரவாகச் செயல்படுவதாக அராபத் அலுவலகம் குற்றம்சாட்ட தொடங்கியது. அபு மாசேன் ஆதரவாளர்கள் இதற்கு எதிராக அல்-ஒமாரி மீது குற்றம் சாட்டினர்.

பலஸ்தீன அதிகாரிகள் அல்-ஒமாரியை ஒரு முறை காசாவில் 5 மணி நேரத்துக்கு கைது செய்த சம்பவம் நடந்தது. மூத்த பலஸ்தீன அதிகாரி ஒருவர் சட்டசபையில் அல்-ஜசீராவை வெளிப்படையாகத் தாக்கிப் பேசினார்.

“பலஸ்தீன நிர்வாகத்துடன் எங்களுக்குப் பல பிரச்னைகள் உள்ளன. ஆனால், நான் எனது ஒளிபரப்பு முறையை மாற்றிக் கொள்ள முடியாது. நான் தற்போது பலஸ்தீன நிர்வாகத்தை எப்படி சித்தரித்துப் படம் பிடிக்கிறேனோ, அந்த முறையில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை. மக்களிடம் உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதுதான் முக்கியம். அதைத்தான் நாங்கள் இப்போது செய்து கொண்டிருக்கிறோம்.

அதிகாரிகளின் கருத்துகள் எங்களுக்கு முக்கியமில்லை. நாங்கள் எங்களது வேலையைச் செய்கிறோம். நாங்கள் சட்டத்தை எந்த வகையிலும் மீறவில்லை. ஆனால், முக்கியமானது என்று கருதும் எதையும், அது அபாயகரமானதாக இருந்தாலும் நாங்கள் படம்பிடிக்காமல் விடுவதில்லை” என்று அந்த அதிகாரிக்கு பதிலடி கொடுத்தார் அல் ஒமாரி.

அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு பலஸ்தீன மக்களிடம் உள்ள செல்வாக்கை பலஸ்தீன அதிகாரிகளும் உணர்ந்தே இருந்தனர். பாலஸ்தீன மக்கள் தங்களது பிரச்னைகளுக்கு பலஸ்தீன அதிகாரிகளை தேடிச் செல்லும் முன்னர் அல்-ஜசீரா தொலைக்காட்சியை தேடி வரத் தொடங்கினர்.

தங்களது பிரச்சினைகளைத் தீர்க்கும் வழியை அல்-ஜசீரா தொலைக்காட்சியின் அல்-ஒமாரி நிச்சயம் கூறுவார் என்று பலஸ்தீன மக்கள் நம்பினர்.

தன்னைத் தேடி வரும் மக்களின் நம்பிக்கையை வீணாக்காமல், பிரச்சினையைத் தீர்க்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை அவர் வழங்கினார். ஆனால், அல் ஜசீராவை தேடி பிரச்னைகளுடன் வந்த பலர், தங்களது பிரச்னைகளில் அல் ஒமாரி நேரடியாக தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்றும் கருதினர்.

இதனால், காலை நேரத்தில் அல்-ஒமாரி, அல்-ஜசீரா அலுவலகத்துக்குள் நுழையும் போதே, அவரது வருகையை எதிர்பார்த்து ஏராளமான பலஸ்தீன மக்கள் வாயிலில் காத்திருப்பார்கள்.

சில சமயங்களில் அல் ஒமாரியை சந்திப்பவர்கள் கூறும் கோரிக்கைகள் நெஞ்சை நெகிழச் செய்பவையாக இருக்கும். இரமலான் விடுமுறைக்குச் சில நாட்களுக்கு முன்னர் அல் ஒமாரியை சந்தித்த நடுத்தர வயது பெண் ஒருவர், தனது கணவரிடம் இருந்து சமீபத்தில்தான் விவாகரத்துப் பெற்றிருந்தார்.

அவருக்கு ரமலான் விடுமுறையின்போது தனது மகளை தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஆசை. அல்-ஒமாரியால் தனக்கு நிச்சயம் உதவ முடியும் என்று நம்பிய அந்தப் பெண்மணி, உதவி கேட்டு அல்-ஜசீரா அலுவலகத்துக்கு வந்திருந்தார்.

இது போன்று தங்களது குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக் கோரியும் அல்-ஒமாரியை சந்தித்தவர்கள் பலர். அவர்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார் அல் ஒமாரி.

பலஸ்தீன பகுதியில் இரண்டாவது முறையாகப் பிரச்சினை வெடித்தது. இந்த முறையும் அல்-ஜசீரா விரிவான முறையில் ஒளிபரப்பை மேற்கொண்டது. துப்பாக்கிக் குண்டுகளின் முழக்கங்களும், இரத்தச் சகதிகளும் அல்-ஜசீராவின் ஒளிபரப்பில் இடம் பெற்றன.

இந்தமுறை போராட்டத்தின்போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள் குண்டுகளின் சத்தத்தில் நொறுங்கிப் போயின. இந்தப் பிரச்னையால் பலஸ்தீனத்தில் அமைதி முற்றிலும் தொலைந்து போனது. பாதிப்புகள் அனைத்தையும் அல்-ஜசீரா வெட்டவெளிச்சமாகப் படம் பிடித்துக் காட்டியது.

2000-ம் ஆண்டில் நடந்த வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னர், ஆக்கிரமிப்புப் பகுதி பிரச்சினை குறித்த விழிப்புணர்வு உலகளவில் ஏற்பட துவங்கியது. பேசித் தீர்க்க முடியாத விடயம் உலகில் ஏதுமில்லை. அது போன்று பலஸ்தீன ஆக்கிரமிப்பு பிரச்சினையும் பேசித் தீர்க்கப்பட வேண்டும் என்று உலக சமுதாயம் உணரத் தொடங்கிய நேரம் அது.

சுதந்திர பலஸ்தீன நாடு அமைவதைத் தடுக்க முடியாது என்பதை அமெரிக்க ஜனாதிபதி புஷ் முழுமையாக உணர்ந்திருந்தார்.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், ரஷ்யா ஆகியவை இணைந்து பலஸ்தீன அமைதிக்கான வரைபடத்தை தயாரித்தன. ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டதோடு சரி. இன்று வரை அதனை முழுமையாக அமல்படுத்த முடியவில்லை.

பலஸ்தீனத்துடன் மல்லுக் கட்டுவதைத் தவிர்த்து வேறு எந்த நடவடிக்கைக்கும் இஸ்ரேலியர்கள் தயாராக இல்லை என பிரித்தானிய எம்.பி.யும், அரபு உரிமைகளுக்காக வாதாடுபவருமான ஜார்ஜ் காலேவே, அல்-ஜசீரா தொலைக்காட்சியில் தெரிவித்தார். அதுதான் உண்மையும்கூட.

இந்த நேரத்தில் பாலஸ்தீன பிரச்னை சர்வதேச அளவில் பேசப்பட அல் ஜசீராவின் ஒளிபரப்பு முக்கிய காரணமாக அமைந்தது.

தொடரும்..

விறுவிறுப்பு

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல