ஞாயிறு, 19 ஜனவரி, 2014

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-9: 30 லட்சம் டிஷ் ஆன்டனாகள்!

கோபம் முடிவுக்கு வரும் வரை தங்களது கவர்ச்சிகரமான விளம்பரப் பிரசாரங்களை நிறுத்தி வைக்க வேண்டிய நிலைக்கு பெரிய விளம்பர நிறுவனங்கள் தள்ளப்பட்டன. அல்-ஜசீரா டி.வி.யில் அமெரிக்க விளம்பரங்கள் நின்றன.

அத்தியாயம் 09

அரபு டி.வி. சேனல்கள், தத்தமது அரசு தொடர்பான செய்திகளையே அதிகம் ஒளிபரப்பின. பலஸ்தீனத்தின் மீது நடக்கும் தாக்குதல்கள் குறித்த செய்திகளுக்குப் போதிய முக்கியத்துவத்தை அளிக்காததுடன், அவற்றைத் தாமதமாகவும் ஒளிபரப்பினர். இதனால், அரபு தொலைக்காட்சிகளின் மீது அரபு நாடுகளைச் சேர்ந்த மக்கள் வெறுப்பில் இருந்தனர்.



அவை அமெரிக்க ஆதரவு தொலைக்காட்சிகள் என்றும் கருதினர்.

இந்நிலையில், அரபு நாடுகளைச் சேர்ந்த மக்களின் ஆர்வத்தைப் பூர்த்தி செய்யும் விதத்தில் அல்-ஜசீரா தொலைக்காட்சி செயல்பட்டது. பலஸ்தீன மோதல்கள் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அளித்தது. அங்கு நடைபெறும் சண்டைகளையும், அதில் பலஸ்தீனர்கள் கொல்லப்படுவதையும் செய்திகளில் காட்டியது.

அல்-ஜசீரா ஒளிபரப்பிய அதிரடித் தகவல்கள் அரபு மக்களை உடனடியாகச் சென்றடைந்தன. இதனால் அல்-ஜசீரா டி.வி. சேனல்கள் ஒளிபரப்பை அரபு நாடுகளில் வசிப்போர் ‘லைவ்’வான டி.வி. சேனல் என்று கூறத் தொடங்கினர்.

பான் அராப் ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், அல்-ஜசீரா தொலைக்காட்சியின் பார்வையாளர்களில் பாதிப்பேர் பலஸ்தீன செய்திகளை விரும்பி பார்க்கும் ஆட்கள் என்று தெரிய வந்தது. இவர்களில் பலர், அரசு சார்பான தொலைக்காட்சிகளைப் புறக்கணித்து, அல்-ஜசீராவை பார்க்கத் தொடங்கினர் என்றும் கூறியது அந்த ஆய்வு.

இந்த நேரத்தல் ஜோர்தான் நாட்டில் அல்-ஜசீராவின் பார்வையாளர்கள் வெகுவாக அதிகரித்தனர். அல்-ஜசீரா தொலைக்காட்சி ஒளிபரப்பை பார்ப்பதற்காகக் குறுகிய காலத்தில் 30 லட்சம் டிஷ் ஆன்டனாக்களை மக்கள் வாங்கியதாக ஜோர்தான் அதிகாரிகள் நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

அல்-ஜசீராவின் பார்வையாளர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்ததன் எதிரொலியாக, அதன் விளம்பர வருவாயும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அந்த நேரத்தில் தொலைக்காட்சி விளம்பரங்களுக்குச் செய்யப்படும் செலவு 1 பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.

போராட்டக் காலத்தில் அல்-ஜசீராவை பார்ப்போரின் எண்ணிக்கை 35 மில்லியனாக உயர்ந்ததால், அரேபிய விளம்பர வருவாயில் பெரும் பங்கு அல்-ஜசீராவுக்கு கிடைக்கும் வாய்ப்பு உருவாகியது.

ஆனால், வேறு ஒரு சிக்கல் ஏற்பட்டது

இந்த நேரத்தில் இஸ்ரேலுக்கு அமெரிக்க அரசு ஆதரவு தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புகளை அரேபியர்கள் புறக்கணிப்புச் செய்தனர். அமெரிக்க ஆதரவு நிறுவனங்களின் தயாரிப்புகளைப் புறக்கணித்தால், வியாபார நோக்கம் காரணமாக அமெரிக்க அரசாங்கம், இஸ்ரேலுக்கு ஆதரவு தராது என்று அரேபியர்கள் நம்பியதுதான் இதற்கு காரணம்.

கோகா கோலா, மெக்டொனால்ட்ஸ், கய்ரோ செய்ன்ஸ்பரி போன்ற பிரபல பிராண்ட்கள் அரேபியர்களால் புறக்கணிக்கப்பட்டன. அரேபிய கடைகளில் இந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் தேங்கின. இதனால், பல கோடி டொலர் மதிப்புள்ள அமெரிக்க தயாரிப்புகள், அரேபிய கடைகளில் முடங்கிக் கிடந்தன.

சரக்குகள் தேங்கியதால் இந்த நிறுவனவங்களின் வருவாயும் பாதிக்கப்பட்டது.

அமெரிக்கர்கள் மற்றும் யூதர்கள் தொடர்புடைய தயாரிப்புகளை அரேபியர்கள் புறக்கணித்த காரணத்தால், பன்னாட்டு நிறுவனங்கள் விளம்பர பட்ஜெட்களை வெட்டின. இதனால், அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு விளம்பர வருவாய் அதிகரிப்பதில் தடை ஏற்பட்டது. விற்பனை பாதிக்கப்பட்ட நிலையில் அல்-ஜசீராவில் விளம்பரங்கள் தருவதை அந்த நிறுவனங்கள் தள்ளிப் போட்டன.

அரேபிய மக்களின் கோபம் முடிவுக்கு வரும் வரை தங்களது கவர்ச்சிகரமான விளம்பரப் பிரசாரங்களை நிறுத்தி வைக்க வேண்டிய நிலைக்கு பெரிய விளம்பர நிறுவனங்களும் தள்ளப்பட்டன. இதனால், அல்-ஜசீரா தொலைக்காட்சியில் வெளியாகிக் கொண்டிருந்த அமெரிக்க பெரிய நிறுவனங்களின் விளம்பரங்கள் நின்றன.

அல்-ஜசீராவின் பார்வையாளர்களின் 78 சதவீதம் பலஸ்தீனியர்கள்தான். தினசரி போராலும், வன்முறைகளாலும் பலஸ்தீனம் பாதிக்கப்பட்டிருந்ததால், அங்கு வசிக்கும் மக்களும் வசதியானவர்களாக இல்லை. பலஸ்தீன மக்களின் தினசரி வருவாய் மிகவும் குறைவாக இருந்தது. இதனால், இவர்களால் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தப்படும் பொருட்களை வாங்க முடியவில்லை. இதனாலும் விளம்பரங்களின் வருகை குறைந்தது.

பலஸ்தீன மோதல்களை ஒளிபரப்பியதால் பார்வையாளர்கள் அதிகரித்த அளவுக்கு அல்-ஜசீராவின் விளம்பர வருவாய் அதிகரிக்கவில்லை.

பலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் வன்முறை கொழுந்து விட்டு எரிந்த நிலையில், இரு தரப்புப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர சர்வதேச அளவில் அமைதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அமைதி முயற்சிகள் நடந்து கொண்டிருந்த வேளையிலும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.

2001-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 400 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பலஸ்தீன மக்கள்.

பலஸ்தீனத்தில் நடந்த வன்முறைகள் குறித்த படக்காட்சிகளை அல்-ஜசீரா சுடச்சுட ஒளிபரப்பியது. பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு திரட்டுவதில் அல்-ஜசீரா ஒளிபரப்பிய படக்காட்சிகள் பெரும்பங்கு வகித்தன. அல்-ஜசீராவில் பலஸ்தீன மக்கள் படும் துன்பத்தைக் கண்ட அரபு மக்கள் ஒன்று திரண்டனர். பலஸ்தீன சகோதரர்கள் பாதிக்கப்படுவதை அறிந்து அவர்களின் ரத்தம் கொதித்தது.

இதையடுத்து, அரபு நாடுகளில் சூழ்நிலை மாறத் துவங்கியது.

தொடரும்..

விறுவிறுப்பு

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல