ஞாயிறு, 19 ஜனவரி, 2014

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-8: ‘சக்தி மிகுந்த’ காட்சிகள்!

சௌதி அரேபியாவில் உள்ள இளைஞர்களில் 15 வயதுக்குட்பட்ட பெரும்பகுதியினருக்கு, அல்-ஜசீராவில் காட்டப்பட்ட போராட்டங்களைப் பார்த்து புதிய விழிப்புணர்வு ஏற்பட்டது. அல்-ஜசீராவில் காட்டப்பட்ட ‘சக்தி மிகுந்த’ உணர்ச்சியை தூண்டக்கூடிய காட்சிகள், அமெரிக்காவுடன் சௌதிக்கு...

அத்தியாயம் 08

வளைகுடா நாடுகளான ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், கத்தார், குவைத், பக்ரைன், சவுதி அரேபியா ஆகியவற்றில் உள்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் அபாயம் உருவானது.



இதில் சிக்கல் என்னவென்றால், இந்த நாடுகள் அமெரிக்க ராணுவத்தின் நிழலில் இருந்தன. சௌதி அரேபியா உள்பட சில நாடுகள், அமெரிக்க ராணுவம் தங்களது மண்ணையும், வேறு சில வசதிகளையும் அனுபவிக்கவும் அனுமதி அளித்திருந்தன.

அப்படியான நாடுகளும், அமெரிக்காவையும், இஸ்ரேலையும் அரபு நாடுகளுக்கு எதிரான எதிரிகளாக கருத வேண்டிய நிலை ஏற்பட்டது. அமெரிக்க, இஸ்ரேல் நாடுகளின் கொடிகள் எரிக்கப்பட்டன. மக்களின் சமூக நிலை, ஊழல், வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு ஆகியவை இந்த நாடுகளில் அமைதியின்மையை உருவாக்கின.

சௌதி அரேபியாவில் உள்ள இளைஞர்களில் 15 வயதுக்குட்பட்ட பெரும்பகுதியினருக்கு, அல்-ஜசீராவில் காட்டப்பட்ட போராட்டங்களைப் பார்த்து புதிய விழிப்புணர்வு ஏற்பட்டது. அல்-ஜசீராவில் காட்டப்பட்ட ‘சக்தி மிகுந்த’ உணர்ச்சியை தூண்டக்கூடிய படக்காட்சிகள், அமெரிக்காவுடன் சௌதிக்கு உள்ள தொடர்பு குறித்து இளைஞர்களை கேள்வி எழுப்ப வைத்தன.

ஜோர்தான் எல்லைப்பகுதியான ஷக்காகா நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை சௌதி அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களைக் கைது செய்ததை எதிர்த்தும் அரசியல் ஆர்வலர்கள் குரல் கொடுத்தனர்.

இந்தக் கட்டத்தில்தான் முதல்முதலாக பெண்களும் போராட்டத்தில் இணைந்துகொண்டு அதிர வைத்தனர்!

ரியாத் நகரில் கால்பந்தாட்டம் பார்க்க வந்த கூட்டத்தினர் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேரணி நடத்த முற்பட்டபோது பதற்றம் அதிகரித்தது. ஜெட்டா நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல் தடவையாக பெண்களும் பங்கேற்றது, சௌதி அரசில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களது ஆண் உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களது கண் முன்னர், “இனி போராட்டத்தில் ஈடுபடமாட்டேன்” என்று பெண்களிடம் உறுதிமொழி எழுதி வாங்கப்பட்ட பின்னரே பெண்கள் வீடு செல்ல முடியும் என்று கூறப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மக்களிடையே அனுதாபத்தை அதிகரித்தது.

பெண்களுக்கு வழங்கப்பட்ட இந்த தண்டனை, அதற்குமுன் ரியாத்தில் பெண்கள் சட்டவிரோதமாக வாகனங்களை ஓட்டி ஈடுபட்ட போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு முற்றிலும் விரோதமாக இருந்தது. அப்போது அது, பெண்கள் போராட்டங்களில் ஈடுபடுவது ‘இஸ்லாமுக்கு எதிரான செயல்’ என்று கூறப்பட்டு, அதற்கு தடை விதித்து, ‘பத்வா’ என்ற மதக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் இம்முறை பெண்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தியதை, ‘இஸ்லாமுக்கு எதிரான செயல்’ என்று சொல்ல முடியவில்லை.

ஜெட்டாவில் பெண்கள் நடத்திய போராட்டத்தின் போது அரேபியர்களிடையே புதிய அரசியல் விழிப்புணர்ச்சி தோன்றியிருந்தது. அல்-ஜசீரா தொலைக்காட்சியில் காட்டப்பட்ட போராட்ட காட்சிகள், மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா நாடுகள் மற்றும் இந்தோனேஷியா, பாகிஸ்தான் நாடுகளில் உள்ள சிறிய கிராமங்களில் கூட, தேசிய எல்லைகளைத் தாண்டி வீடுகளுக்குள், அலுவலகங்களுக்குள்ளும் சென்றடைந்தன.

பலஸ்தீனத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த, இதைத் தவிர எந்த தேவையும் ஏற்படவில்லை. அதை அல்-ஜசீரா கச்சிதமாக செய்தது.

வியட்நாம் போரின் போது தாங்கள் செயல்பட்ட விதத்துடன், அல்-ஜசீரா தற்போது செயல்படும் விதத்தை, அமெரிக்க ஊடக விமர்சகர்கள் சிலர் ஒப்பிட்டனர். இரண்டு சம்பவங்களின் போதும், தொலைக்காட்சிகள் மூலம் பார்வையாளர்கள் நடப்பது என்ன என்பதை உடனுக்குடன் அறிய முடிந்தது. அதையடுத்தே, மக்கள் ஆதரவு பெருகிறது.

இது குறித்து அல்-ஜசீராவின் பொது மேலாளர் ஜாசிம் அல்-அலி, “அரேபிய ஊடகங்களில் நாங்கள் புரட்சியை உருவாக்கியுள்ளோம். பார்வையாளர்களிடம் இருந்து நீங்கள் எதையும் மறைக்க கூடாது. அவர்களது மனப்பான்மை மாறிவிட்டது” என்றார்.

அல்-ஜசீரா பிரபலமாக துவங்கிய காலத்தில், அரபு மக்கள் எப்போதும் உடனுக்குடன் அறிய மிகுந்த ஆர்வம் காட்டும் செய்திகள் எவை தெரியுமா? பலஸ்தீனத்தில் அவ்வப்போது இஸ்ரேல் ராணுவத்தினரால் நடத்தப்படும் தாக்குதல்கள், அதனால் ஏற்பட்ட இரத்தக்களறி, மேற்குகரைப் பகுதியில் நிலவும் பதற்றம் போன்ற செய்திகள்தான்.

பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட சமயங்களில் தங்களது சகோதரர்களே உயிரிழந்தது போன்ற துயரத்தை அரபு மக்கள் அடைந்தனர். இதனால் பலஸ்தீனத்தில் நடைபெறும் தாக்குதல்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டும் என அவர்கள் விரும்பினர்.

மக்களின் இந்த ஆர்வத்தை அரபு நாடுகளின் டி.வி. சேனல்கள் பூர்த்தி செய்யவில்லை. அதுவே, அல்-ஜசீராவுக்கு வாய்ப்பாக அமைந்தது. அல்-ஜசீரா அதை சரியாகவும், புத்திசாலித்தனமாகவும் பயன்படுத்திக் கொண்டது.

தொடரும்..

விறுவிறுப்பு
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல