தொடரை விட, தொடருக்கான டிரெய்லர் ஒளிபரப்பு அரபு மக்களை மிகவும் கவர்ந்ததுதான் விசித்திரமானது. அதே ட்ரெயிலர் பெரிய சர்ச்சை ஒன்றையும் ஏற்படுத்தியது. அப்படி என்னதான் இருந்தது ட்ரெயிலரில்?
அத்தியாயம் 13
பலஸ்தீன நிர்வாகம், ரமல்லாவில் இயங்கி வந்த அல்-ஜசீராவின் அலுவலகத்தை அதிரடியாக மூடியதற்கு அங்குள்ள மக்கள் மத்தியில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. யாசர் அராபத்தின் நிர்வாகம் என்ன செய்தாலும், கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் அப்பகுதி மக்கள், அல்-ஜசீராவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்த அதிசயம் அது.
பலஸ்தீன நிர்வாகம் அல்-ஜசீராவின் அலுவலகத்தை அதிரடியாக மூடியதற்கு பல காரணங்கள் சொன்னாலும், இறுதியில் அல்-ஜசீரா அலுவலகத்தை மூடும் முடிவைக் கைவிட வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, அல்-ஜசீரா யாசர் அராபத்தின் நிர்வாகத்துக்கு பணிந்துபோய் ‘சொல்வதை ஒளிரப்பிக் கொண்டு’ இருந்துவிடும் என்ற ஒரு கணிப்பு சிலரிடம் இருந்தது. ஆனால், அல்-ஜசீரா செய்தது, அந்த நினைப்புக்கு தலைகீழான ஒரு காரியத்தை!
லெபனான் உள்நாட்டுப் போர் குறித்து 15 பாகங்களாகத் தயாரிக்கப்பட்ட குறும்படம் ஒன்றை ஒளிபரப்பியது. அதில் இடம் பெற்ற யாசர் அராபத் குறித்த காட்சிகள், அவரது தளபதிகளுக்கு அல்-ஜசீரா மீது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
லெபனான் போர் என்று அழைக்கப்பட்ட இந்தக் குறும்படம், 2 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட பெரிய ப்ராஜெக்ட். 15 ஆண்டுப் பிரச்சினை குறித்து எடுக்கப்பட்ட முதல் அரபு குறும்படம் இது. இந்தக் குறும்படத்துக்கு அல்-ஜசீரா பல லட்சம் டாலர்களை செலவிட்டது.
இந்த குறும்படம் ஏற்படுத்திய சூறாவளி யாசர் அராபத்தை மாத்திரம் தாக்கவில்லை. இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷெரோனையும் தாக்கியது. லெபனான் போரில், ஏரியல் ஷெரோனின் பங்கு என்ன என்பது, இந்த குறும்படம் மூலம் வெளியானது.
லெபனானில் இஸ்ரேலின் ஊடுருவலுக்குத் தனிப்பட்ட முறையில் அவர் காரணகர்த்தாவாக இருந்ததோடு மட்டுமின்றி, ஷாடிலா, சப்ரா ஆகிய இடங்களில் பலஸ்தீன அகதிகள் படுகொலை செய்யப்பட்டதிலும் அவருக்கு மறைமுகப் பங்கு இருந்தது குறும்படம் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. (அல்-ஜசீரா குறும்படத்தில் காட்டப்பட்ட பல விபரங்கள், போருக்குப் பின்னர் இஸ்ரேல் நடத்திய விசாரணையிலும் தெரிய வந்தன)
அந்த நேரத்தில் இந்தப் பிரச்சினை ஏரியல் ஷெரோனின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதற்கான அறிகுறியாகக் கருதப்பட்டது.
பகுதி பகுதியாக ஒளிபரப்பாகிய இந்த குறும்படத்தின் ஒரு பாகத்தில், பலஸ்தீன அகதிகள் படுகொலை தொடர்பான பல காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இவை ஏரியல் ஷெரோனுக்கு நிச்சயம் தொல்லைகளைத் தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
போர் முடிந்ததும் வெளியாகும் இந்தத் தொலைக்காட்சி தொடர், பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல’ இருக்குமே தவிர, காயங்களுக்கு மருந்தாக அமையாது என்றும் விமர்சகர்கள் சிலர் தெரிவித்தனர்.
இந்தக் குறும்பட தொடர், லெபனான் பிரச்சினைகளை பல்வேறு கோணங்களில் இருந்து அலசியது. அரபு, இஸ்ரேல் மற்றும் சர்வதேசப் பிரமுகர்களின் கருத்துகள் அதில் இடம் பெற்றிருந்தன. லெபனானுக்கு உள்ளேயும், வெளியேயும் நடந்த பிரச்சினைகளின் பல்வேறு வடிவங்கள் தொடரில் வெளியாகின. இந்தப் போர் எப்படி நடத்தப்பட்டது என்பதற்கான பிரச்னைக்குரிய தகவல்கள் முதல் முறையாக அலசப்பட்டன.
‘கிராபிக்ஸ்’ முறையில் தயாரிக்கப்பட்ட படக்காட்சிகள் சிலவும் இடம் பெற்றன. நெஞ்சை உறைய வைக்கும் போர்க்களக் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களும் அதில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன. அல்-ஜசீரா தொலைக்காட்சியில் வாரா வாரம் ஒளிபரப்பான இந்தத் தொடர் மக்களிடையே மிகவும் பிரபலமானதாக விளங்கியது.
தொடரை விட, தொடருக்கான டிரெய்லர் ஒளிபரப்பு அரபு மக்களை மிகவும் கவர்ந்ததுதான் விசித்திரமானது. அதே ட்ரெயிலர் பெரிய சர்ச்சை ஒன்றையும் ஏற்படுத்தியது.
இந்த டிரெய்லரில் சில லெபனான் போராளிகள், யாசர் அராபத்தின் போஸ்டரை பிடித்துக் கொண்டு, அவரது தலைக்கு முன்னர் ஒரு ஷுவை காட்டுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது.
இந்தக் காட்சி அடங்கிய டிரெய்லர் அல்-ஜசீராவில் ஒளிபரப்பான சிறிது நேரத்திலேயே பலஸ்தீன அதிகாரிகளிடம் இருந்து வாலித் அல்-ஒமாரிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான அதிபர் யாசர் அராபத்தின் மரியாதைக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையிலான காட்சியை நீங்கள் ஒளிபரப்பியது வருத்தமளிக்கிறது. இதனால், அல்-ஜசீராவின் அலுவலகத்தை மூடிவிட்டு, குறும்பட டிரெய்லர் கேசட்டை எங்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்” என்றார் பலஸ்தீன அதிகாரி.
பலஸ்தீன அதிகாரிகளுக்கு ஏற்க முடியாத தகவல்களை ஒளிபரப்பும் போதெல்லாம் இது போன்ற பல எதிர்ப்புகளை அல்-ஜசீரா தொலைக்காட்சி ஏற்கனவே சந்தித்துள்ளதால், தற்போது பலஸ்தீன அதிகாரிகளின் மிரட்டலைக் கண்டு அல்-ஜசீரா நிர்வாகம் சிறிதும் பயப்படவில்லை. கேசட்டை ஒப்படைத்து அலுவலகத்தை மூட அல்-ஒமாரி உடனடியாக மறுப்புத் தெரிவித்தார்.
சில மணி நேரங்களில் துப்பாக்கிகள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் அல்-ஜசீரா அலுவலகத்துக்குள் ஒரு குண்டர் படை நுழைந்தது.
தொடரும்..
விறுவிறுப்பு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக