பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய ராணுவ வாகனங்களை தாக்க, இவர்கள் அவர்களை திருப்பித் தாக்க, இங்கு ஒரு மினி யுத்தமே நடந்தது. அவை அவ்வளவும், ‘லைவ்’ ஆக அல்-ஜசீராவில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
அத்தியாயம் 12
அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் மாலையில் அல்-ஒமாரி, ரமல்லா நகர அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். அப்போது இஸ்ரேலிய ராணுவத்தின் 12-க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய வாகனங்கள், ரமல்லா நகரைச் சுற்றி வலம் வரத் தொடங்கின.
அலுவலகத்தின் உள்ளே இருந்து பார்த்தபோது இஸ்ரேலிய ராணுவ வாகனங்கள் அல்-ஜசீரா அலுவலகத்தைச் சுற்றி சாலையில் சென்று கொண்டிருந்தது தெளிவாக தெரிந்தது.
அல்-ஒமாரி வீடியோ கேமராவை எடுத்து சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனங்களைப் படம் பிடிக்கத் துவங்கினார்.
அந்த நேரத்தில் அல்-ஒமாரி எடுத்த காட்சிகள் அல்-ஜசீராவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.
பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய ராணுவ வாகனங்களை தாக்க, இவர்கள் அவர்களை திருப்பித் தாக்க, இங்கு ஒரு மினி யுத்தமே நடந்தது. அவை அவ்வளவும், ‘லைவ்’ ஆக அல்-ஜசீராவில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
அல்-ஜசீரா அலுவலகத்துக்கு முன் சண்டை நடந்ததால், எந்தவித முயற்சியும் இல்லாமல், வெறும் அதிஷ்டத்தில் கிடைத்த சந்தர்ப்பம் இது.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனர்கள் நடத்திய துப்பாக்கிச் சண்டை காட்சிகளின் நேரடி ஒளிபரப்பு தெளிவாக இருந்தது. இந்தக் காட்சிகள் இஸ்ரேல் ராணுவத்தினரின் உதவியுடன் எடுக்கப்பட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கியது. இந்தக் காட்சியைத் அல்-ஜசீராவில் பார்த்த பாலஸ்தீன போராளி அமைப்புகளுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.
அந்த சந்தேகம் என்ன?
“இந்தக் காட்சிகள், சண்டையின்போது இஸ்ரேலிய போர் வீரர்களை ஒருங்கிணைக்க உதவும் என்பதற்காக, ஒரு காரணத்துடன் ஒளிபரப்பாகின்றனவா?” என்பதே சந்தேகம்.
அவர்களின் சந்தேகம் நியாயமானதுதான் என்பதுபோல இருந்தன, ஒளிபரப்பான காட்சிகள் உருவாக்கிய தோற்றம்.
இந்த சந்தேகம், பல விடுதலை அமைப்புகளுக்கும் நீண்டகாலமாக இருந்தது. பல அமைப்புகள் அல்-ஜசீராவை, ‘சந்தேக லிஸ்டிலேயே’ வைத்திருந்தனர்.
2001-ம் ஆண்டு. அது இஸ்ரேல் நாட்டின் தேர்தல் ஆண்டு.
இஸ்ரேல் அரசியல்வாதிகளுக்கு எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு கூக்குரல் இடுவது என்பது மிகவும் பிடித்தமான பழக்கம். ஊழல், நிர்வாகத் திறமையின்மை, போர் என பல பிரச்சினைகளில் இஸ்ரேல் தவித்தாலும், இஸ்ரேலிய மக்களுக்கு ஒரே ஆறுதலாக இருந்தது வாக்குப்பெட்டிதான்.
தங்களுக்கு விரோதமாகச் செயல்படும் ஆட்சியாளர்களைத் தேர்தலுக்குத் தேர்தல் மாற்ற அவர்கள் தவறியதே இல்லை.
பலஸ்தீன பிரச்சினையில் இஸ்ரேலின் செயல்பாடுகள் குறித்து அல்-ஜசீரா வெளியிட்ட காட்சிகளால், இஸ்ரேலிய அரசியல்வாதிகள் அல்-ஜசீராவுக்கு எதிராக உச்சகட்ட கூக்குரலை எழுப்பத் தொடங்கியிருந்தனர். அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு எதிரான பிரசாரம், இரு பிரதான கட்சிகளின் தேர்தல் பிரசாரத்தின் முக்கிய பகுதியாகவே மாறியிருந்தது.
இந்த நிலையில், ஜனவரி மாதத்தில் ஓர் பரபரப்பான பேட்டியை ஒளிபரப்பியது அல்-ஜசீரா.
இதற்கு முன் எப்போதும் நடந்திராத ஒரு விடயமாக இஸ்ரேலிய பிரதமர் எகுத் பராக்கின் ஒரு நீண்ட பேட்டியை ஒளிபரப்பியதுதான் பரபரப்பை ஏற்படுத்திய விடயம்.
அல்- ஜசீராவுக்கு அளித்த பேட்டியில் இஸ்ரேல் பிரதமர் எகுத் பராக், வன்முறையை நிறுத்துமாறும், பேச்சுவார்த்தைக்கு வருமாறும் பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத்துக்கு அழைப்பும் விடுத்திருந்தார்.
அரபு, மற்றும் பலஸ்தீன மக்களை பார்வையாளராக கொண்டிருந்தும், இஸ்ரேலிய பிரதமரின் பேட்டியை ஒளிபரப்பிய துணிச்சலான செயலுக்காக அல்-ஜசீராபாராட்டப்பட்டது.
ஒரு புறம் இஸ்ரேலிய பிரதமர் எகுத் பராக்கின் பேட்டியை ஒளிபரப்பினாலும், அவரது நடவடிக்கைகளுக்கு எதிரான கருத்துகளையும் அல்- ஜசீரா தொடர்ந்து தனது அலைவரிசையில் ஒளிபரப்பி வந்தது.
ஒரு மாதத்துக்குப் பின் நடந்த தேர்தலில் ஏரியல் ஷெரோனிடம், எகுத் பராக் தோல்வி அடைந்தார். அல்-ஜசீரா, ஏரியல் ஷெரோனின் வெற்றி ஊர்வலத்தையும் நேரடி ஒளிபரப்புச் செய்தது.
இஸ்ரேலில் புதிதாகப் பொறுப்பேற்ற ஏரியல் ஷெரோன் அரசு, ஊடகங்கள் மத்தியில் நடந்த போட்டியில், அல்-ஜசீராவிடம் தங்களது தரப்பு தோல்வி அடைந்து வருவதை அறிந்தே இருந்தது.
புதிய அரசாங்கம் பொறுப்பேற்பதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் அல்-ஜசீராவுக்கு போட்டியாக ஒரு ஆங்கில, அராபிக் மொழி டி.வி. சேனலை உருவாக்குவதற்காக இஸ்ரேலிய நிதியமைச்சகம் நிதி ஒதுக்கியிருந்தது.
இந்த இரண்டு மொழிகளிலும் இஸ்ரேலிய ஒளிபரப்பை நடத்தி, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அதற்கு அப்பாலும் இஸ்ரேல் தரப்புக் கருத்துகளை பரப்புவதுதான் திட்டம்.
மூன்று புதிய அலைவரிசைகளைத் துவங்க இஸ்ரேலிய அரசாங்கம் திட்டமிட்டது. இதில் ஓர் அலைவரிசை முழுக்க முழுக்க ஆங்கில, அராபிக் மொழி ஒளிபரப்புகளுக்காகப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த அலைவரிசைகள் மூலம் இஸ்ரேலிய செய்திகள் மற்றும் நாட்டு நடப்புகளைச் செயற்கைக்கோள் மூலம் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒளிபரப்ப திட்டமிடப்பட்டது. “இதுதான் இஸ்ரேலின் மீடியா குறித்த கொள்கை” எனவும் இஸ்ரேல் ஒளிபரப்புக் கழகத் தலைமைப் பொறுப்பில் இருந்த நாச்மேன் சகாய் கூறினார்.
இஸ்ரேலிய அரசின் நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் முயற்சிகளை அரபு நாடுகள் எடுக்கத் துவங்கின. இதற்கான வழிகளை ஆலோசிப்பதற்காக லெபனானில் அரேபிய நாடுகளின் தகவல் துறை அமைச்சர்களின் கூட்டம் கூட்டப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் அரேபிய செயற்கைக்கோள் அலைவரிசையை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
ஆங்கிலத்தில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் இந்தத் தொலைக்காட்சி மூலம் அரபு நாடுகளின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கவும் திட்டமிடப்பட்டது. அரேபிய தொலைக்காட்சி ஒளிபரப்பை ஹீப்ரூ (இஸ்ரேலிய மொழி) மொழியிலும் செய்யலாம் என லெபனான் அமைச்சர் ஆலோசனை தெரிவித்தார்.
இப்படியாக இரு தரப்பு அரசுகளும் டி.வி. சேனல்களை துவங்கும் முயற்சியில் இறங்கி, அல்-ஜசீராவின் இடத்தை பிடிக்க துடிதுடித்தன.
இந்த துடிப்பின் ஒரு பகுதியாக பலஸ்தீன நிர்வாகம், ரமல்லாவில் இயங்கி வந்த அல்-ஜசீராவின் அலுவலகத்தை அதிரடியாக மூடியது.
தொடரும்..
விறுவிறுப்பு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக