அல்-ஜசீராவின் மாலை நேரச் செய்திகளில் திரும்ப திரும்ப ஒளிபரப்பப்பட்ட இந்த தாக்குதல் வீடியோ காட்சியை, இஸ்ரேலிய சேனல்களும் வாங்கி ஒளிபரப்பின. இதன் மூலம் பலஸ்தீன பகுதியில் பீரங்கி குண்டுகள்...
அத்தியாயம் 11
அல் ஜசீரா, “சில விடயங்களை மறைத்தோம். ஆனால், எங்களது செய்திகள் ஒருதலைப்பட்சமானது அல்ல” என்று ஒரு தடவை கூறியது எப்போது தெரியுமா?
தற்கொலை படையால் இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்ட காட்சியை ஒளிபரப்பும் போது, அதை தொடர்ந்து இஸ்ரேலிய ராணுவம் பலஸ்தீன மக்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதல்களையும் சேர்த்தே காட்டுவார்கள். இஸ்ரேலிய ராணுவத்தினர் கொல்லப்பட்டதை குறிப்பிட மாட்டார்கள். ஆனால், பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்ட விபரங்களை தெரிவிப்பார்கள்.
அதைப்பற்றி கேட்டபோதுதான் அல்-ஒமாரி, “சில விடயங்களை மறைத்தோம். ஆனால், எங்களது செய்திகள் ஒருதலைப்பட்சமானது அல்ல” என்று கூறினார்.
“ராணுவத்தினர் கொல்லப்படுவது குறித்து நாங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. மக்களின் நலன் குறித்துதான் ஆர்வம் காட்டுகிறோம். பலஸ்தீனர்கள் ஆக்கிரமிப்பில் உள்ளார்கள், பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை யாரும் மறுக்கவில்லை. அதைத்தான் நாங்கள் காட்டுகிறோம்“ என்று தமது ஒளிபரப்பு குறித்து அதிரடியாக விளக்கமும் தெரிவித்தார்.
அதேநேரத்தில் மற்றொரு விஷயத்தையும் ஒப்புக்கொள்ள வேண்டும். தற்கொலை படையால் இஸ்ரேலியர்கள் கொல்லப்படும்போது, ராணுவத்தினர் கொல்லப்படுவது பற்றி கண்டுகொள்ளாத அல்-ஜசீரா, தாக்குதலில் இஸ்ரேலிய பொதுமக்கள் கொல்லப்பட்டால், விலாவாரியாக சொல்ல தவறுவதில்லை.
மக்கள் கொல்லப்படும் விஷயத்தில், இஸ்ரேலியர்கள், பலஸ்தீனர்கள் என்று வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.
“இஸ்ரேலுக்கு எதிரான ஏஜென்டாக அல்-ஜசீரா செயல்படுகிறது” என்று அப்போதைய இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் ஷிமோன் பெரஸ் தெரிவித்த கருத்துகளை இஸ்ரேலியர்களில் பலரே ஏற்கவில்லை. இதற்கு காரணம் அல்-ஜசீரா பாரபட்சமின்றி இஸ்ரேல் தரப்பைச் சேர்ந்தவர்களின் பேட்டிகளையும், இஸ்ரேலிய அதிகாரிகளுடன் பலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்களின் கருத்து மோதல்களையும், வெளிப்படையாக வெளியிட்ட விதம்தான்.
இஸ்ரேலிய எதிர்ப்பு சேனல் என்று இஸ்ரேலிய அரசால் குற்றம்சாட்டப்பட்ட அல்-ஜசீராவில் இஸ்ரேலிய தரப்பு ஆட்களுக்கும், சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டு வந்தது.
உதாரணமாக, சிடியன் எஸ்ரா (இஸ்ரேலிய பாதுகாப்புச் சேவை அமைப்பின் முன்னாள் துணை தலைவர்), இசால் கார்மோன் (இஸ்ரேல் பிரதமர்கள் இட்ஷாக் ஷமீர், இட்ஷாக் ரபின் ஆகியோருக்கு தீவிரவாத எதிர்ப்பு ஆலோசகராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்) ஆகியோர் அடிக்கடி அல்-ஜசீரா தொலைக்காட்சியில் தோன்றி விவாத மேடையில் தங்களது இஸ்ரேல் ஆதரவு கருத்துகளைத் தெரிவிக்க அனுமதிக்கப்பட்டனர்.
மேற்குக்கரை பதா கட்சி தலைவர் மார்வான் பர்கோதியுடன் சாட்டிலைட் இணைப்பு மூலம் இவர்கள் கருத்துகளை பறிமாறுவது அல்-ஜசீராவில் அடிக்கடி இடம் பெற்றது.
இது போன்ற பாரபட்சமற்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியதன் மூலம், அல்-ஜசீரா தொலைக்காட்சி இஸ்ரேலியர்களுக்கு எதிரானது என்ற கருத்தை ஷிமோன் பெரசால், தமது சொந்த நாட்டு மக்களிடையே கூட ஏற்படுத்த முடியாமல் போனது.
சில நேரங்களில் அல்-ஜசீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காட்சிகள் இஸ்ரேலிய ராணுவத்துக்கும் பலன் தரக்கூடியதாக அமைந்திருக்கிறது.
ஒரு சமயம் மூன்று பலஸ்தீனிய இளைஞர்கள், யூத குடியேற்றப் பகுதிகள் மீது சிறிய ரக பீரங்கிக் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் தொடர்பாக அல்-ஜசீரா சில காட்சிகளை ஒளிபரப்பியது. அந்தக் காட்சிகள், இஸ்ரேலிய ராணுவத்துக்கு நீண்ட காலமாக விடை தெரியாமல் இருந்த சில கேள்விகளுக்கு விடையாக அமைந்தன.
அது என்ன விவகாரம்?
பலஸ்தீனத்தில் இருந்த போராளிக் குழுக்களுக்குள் ஹமாஸ் இயக்கம் பலம் வாய்ந்தது. மேலும் பல போராளி குழுக்களும் பலஸ்தீனத்தில் செயல்பட்டு வந்தன. போராளி குழுக்களைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தனர்.
பல்வேறு வகையான ஆயுதங்களைத் தாங்களாகவே தயாரிக்க முடியும் என்று இஸ்ரேலியர்களுக்கு உணர்த்த வேண்டிய நிலையில் இந்த இயக்கங்கள் இருந்தன.
இதனால், யூத குடியேற்றப் பகுதியில் நடத்தப்பட்ட பீரங்கி தாக்குதல் உள்பட, இதற்கு முன் நடைபெற்ற 12-க்கும் மேற்பட்ட தாக்குதலுக்கு ஹமாஸ் இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவித்தது. மக்கள் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக மற்ற குழுக்களும் சில தாக்குதல்களை தாங்கள் நடத்தியதாகக் கூறினர்.
ஆனால், பலஸ்தீன அதிகாரிகளோ போராளி குழுக்களின் இந்த அறிவிப்பை ஒப்புக் கொள்ள மறுத்தனர். தங்களது பகுதியில் பீரங்கிக் குண்டுகள் ஏதும் இல்லை என்று அவர்கள் தொடர்ந்து மறுத்து வந்ததுதான் இதற்கு காரணம்.
இந்நிலையில், அல்-ஜசீரா தொலைக்காட்சியின் இரமல்லா பிரிவு மூலம் ஒளிபரப்பப்பட்ட 20 விநாடிகள் ஓடக் கூடிய தாக்குதல் வீடியோ காட்சி, யாரால் பீரங்கி குண்டுகள் ஏவப்படுகின்றன என்ற கேள்விக்கு விடையாக அமைந்தது.
அல்-ஜசீராவின் மாலை நேரச் செய்திகளில் திரும்ப திரும்ப ஒளிபரப்பப்பட்ட இந்த தாக்குதல் வீடியோ காட்சியை, இஸ்ரேலிய சேனல்களும் வாங்கி ஒளிபரப்பின. இதன் மூலம் பலஸ்தீன பகுதியில் பீரங்கி குண்டுகள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.
“இந்த வீடியோ காட்சிகள் எங்களுக்கு கிடைத்தவை. இது வெளியே தெரிய வேண்டிய விஷயம் என்று நாங்கள் நினைத்ததால் ஒளிபரப்பினோம்” என இந்த காட்சிகளை ஒளிபரப்பியதற்கு காரணம் கூறினார் அல்-ஒமாரி.
அல்-ஜசீராவில் இந்தக் காட்சி ஒளிபரப்பப்பட்டதும், அதை இஸ்ரேலிய சேனல்கள் மறு ஒளிபரப்பு செய்ததும், பலஸ்தீன போராளிக் குழுக்களில் சிலவற்றுக்கு அல்-ஜசீரா மீது சந்தேகம் ஏற்பட காரணமாகியது. அல்-ஜசீரா சேனலுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் தொடர்பிருப்பதாக பலஸ்தீன போராளிக் குழுக்களில் சிலர் கருதினர்.
அல்-ஜசீராவில் ஒளிபரப்பாகும் வீடியோ காட்சிகளை வைத்து இஸ்ரேலியர்கள் தங்களது தாக்குதல் திட்டங்களை ஒருங்கிணைக்கிறது என்று ஒரு பலஸ்தீன போராளிக் குழு வெளிப்படையாக கூறியது.
சில நேரங்களில் இப்படி எழுப்பப்படும் சந்தேகங்கள், நம்பத் தகுந்ததாகவும் அமைந்தன. அதற்கும் ஒரு சுவாரசியமான சம்பவத்தை உதாரணமாக கூறலாம்.
தொடரும்..
விறுவிறுப்பு இணையம்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக