அத்தியாயம் 19
செப்.11 தாக்குதல்கள் நடந்து 9 நாட்களுக்குப் பின்னர், 2001-ம் ஆண்டு செப்டெம்பர் 20-ம் தேதி, அல்-ஜசீரா, ஒசாமா பின்லேடனின் மற்றொரு பேட்டியை ஒளிபரப்பியது.
இந்தப் பேட்டி உண்மையில், புதிதாக ஒளிப்பதிவு செய்யப்பட்டதல்ல. 1998-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எடுக்கப்ப்பட்ட அந்த பேட்டி, செப். 11 தாக்குதலின்பின் ஒளிபரப்பு செய்யப்பட்டதன் பின்னணியில் ஒரு காரணமும் இருந்தது.
90 நிமிடம் ஓடும் இந்தப் பேட்டியின் தொடக்க அறிவிப்பாக, “துப்பாக்கி ஏந்திய கோடீஸ்வரரான பின் லேடன், மேற்கத்தியர்களால் ஜாம்பவானாக மாற்றப்பட்ட விதம்” தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்லேடன் குதிரையில் சவாரி செய்தல், துப்பாக்கியால் ‘சடசட’வென்று குண்டு மழை பொழிதல் போன்றவற்றுடன், பின்லேடன் புல்டோசர் ஓட்டுவதும் பேட்டியின் போது காட்சிகளாக ஒளிபரப்பானது.
சுருக்கமாக சொன்னால், பின்-லேடன் பில்ட்-அப் ஒளிபரப்பு அது. பின்-லேடன் என்ற நபர், அடுத்துவரும் மாதங்களில் முக்கியத்துவம் பெறப் போகிறார் என்பதை மறைமுகமாக காட்டிய ஒளிபரப்பு.
பின்-லேடனின் பின்-லேடன் பில்ட்-அப் காட்சிகளை அடுத்து, பின்-லேடனை அல்-ஜசீராவின் பாகிஸ்தான் நிருபர் கமால் இஸ்மாயில், கண்ட பேட்டி ஒளிபரப்பானது. பாகிஸ்தானில் உள்ள அடையாளம் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் பின்லேடன் பேட்டி எடுக்கப்பட்டிருந்தது.
“அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான புனிதப் போரில், ஒவ்வொரு முஸ்லிமும் பங்கு பெற வேண்டியது அவசியம்” என இந்தப் பேட்டியில் தனது கருத்தை விரிவாகக் கூறினார் பின்-லேடன். குரானை கரைத்துக் குடித்திருந்த அவர், முகமது நபிகளின் அறிவுரைகளை எடுத்துரைத்ததுடன், தனது வாதத்துக்கு ஆதரவாக அரபி கவிதைகளையும் மேற்கோள் காட்டினார்.
நீண்ட தாடியுடன் இருந்த பின்லேடன், “கடவுளே, ஒவ்வொரு முஸ்லிமும் ஜிகாத் போரில் பங்கேற்க முன் வர வேண்டும்” என்று கேட்பதுடன் அந்தப் பேட்டி முடிந்தது.
அமெரிக்காவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பின்லேடன்தான் காரணம் என்று அமெரிக்க நாடு குற்றம் சாட்டியிருந்த நேரத்தில், “இந்தப் பேட்டியை இரண்டாவது முறையாக அல்-ஜசீரா, அந்த நேரத்தில் ஒளிபரப்பியது ஏன்?” என்ற கேள்வி, மேற்கத்திய ஊடகங்களால் எழுப்பப்பட்டது.
இந்தக் கேள்விக்கும் விடையளித்தது அல்-ஜசீரா.
“இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்த தீவிரவாதிகளின் மூளை என்று அமெரிக்காவால் கூறப்பட்ட பின்லேடனின் மனதில் உள்ளது என்ன என்பதை மக்கள் அறியவே, இந்தப் பேட்டியை மறு ஒளிபரப்பு செய்தோம்” அல்-ஜசீரா தெரிவித்தது.
அல்-ஜசீரா ஒளிபரப்பிய இந்த மறு ஒளிபரப்பு, அவர்களுக்கு பொருளாதார ரீதியில் பெரிய பலனைக் கொடுத்தது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். பின்லேடனின் காட்சிகளைத் தாங்களும் பணம் கொடுத்து வாங்கி ஒளிபரப்ப உலகத் தொலைக்காட்சிகள் போட்டியிட்டன.
அல்-ஜசீரா பின்னர் இந்த டேப்பை பகுதி பகுதியாகப் பிரித்து பல தடவைகள் ஒளிபரப்பியது.
இதன் பின்னர் செப்டெம்பர் 24-ம் தேதி, அல்-ஜசீராவின் கத்தார் அலுவலகத்துக்கு ஒரு பேக்ஸ் வந்தது. அது அல்-காய்தாவின் அறிக்கை. டைப் ரைட்டரால் டைப் செய்யப்பட்டிருந்த அந்த அறிக்கையில், ஒசாமா பின்லேடன் தனது முழுப் பெயரான ஒசாமா பின் முகமது பின் லேடன் என்று கையெழுத்திட்டிருந்தார்.
அந்த அறிக்கையை அல்-ஜசீரா எந்த விதத் தயக்கமும் இன்றி ஒளிபரப்பியது.
அதனை அல்-ஜசீரா அறிவிப்பாளர் படிக்த்த வேளையில், டைப் செய்யப்பட்ட ஒரிஜினல் அறிக்கை முழுமையாக திரையில் காண்பிக்கப்பட்டது.
“பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களுக்கான செய்தி” என்ற தலைப்பில் அந்த பரபரப்பு அறிக்கையை பின்லேடன் எழுதியிருந்தார். பாகிஸ்தான் முஸ்லிம்களை அமெரிக்காவுக்கு எதிராகத் தூண்டி விடும்படியான செய்தி, அந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்தது.
அமெரிக்க ராணுவத்தை, ‘மதப்போர் புரியும் படை’ என்று அந்த அறிக்கையில குறிப்பிட்டு அதிரடியாக விமர்சித்திருந்தார் ஒசாமா பின்லேடன்.
“அமெரிக்க படைகளை ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் நுழைய விடாதீர்கள். அவர்களை தடுத்து விரட்டுங்கள். அவர்களை வெளியில் தள்ளுங்கள். அதற்கு பாகிஸ்தான் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும்” என்பது ஒசாமா பின்லேடனின் வேண்டுகோளாக இருந்தது.
இந்த அறிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி புஷ், 8 நாட்களுக்கு முன் கூறிய ஒரு கருத்துக்கும் பதிலடி கொடுத்திருந்தார் பின்லேடன்.
செப்டெம்பர் 16-ம் தேதி வெள்ளை மாளிகையின் புல் தரையில் அமெரிக்க அதிபர் புஷ் பத்திரிகையாளர்ளை சந்தித்தார். அப்போது உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்த அமெரிக்க ஜனாதிபதி புஷ், அமெரிக்காவின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்த தாங்கள் தயாராக இருப்பதை உலகத்துக்கு உணர்ந்த நினைத்தார்.
அப்போது அவர் கூறிய ஒரு வார்த்தை சர்வதேச அளவில் முக்கியத்துவத்தை பெற்றது. அந்த வார்த்தையில் அர்த்தம் என்ன? …தொடரும்
விறுவிறுப்பு இணையம்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக