ஞாயிறு, 19 ஜனவரி, 2014

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-22: பெண் வேஷத்தில் எல்லைக்குள் புகுந்த செய்தியாளர்கள்


அத்தியாயம் 22

அமெரிக்காவில் செப்.11 தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர், காபூலில் மூன்று வெளிநாட்டவர்கள் மட்டுமே செய்தியாளர்களாக இருந்தனர். அவர்களும் ஏ.எப்.பி., ஏ.பி., ரொய்ட்டர்ஸ் ஆகிய சர்வதேச செய்தி ஏஜன்சிகளின் செய்தியாளர்கள்.



செப்.11 தாக்குதலுக்கு பின், அமெரிக்க ராணுவம் ஆப்கனிஸ்தானுக்குள் நுழையப் போகிறது என்பது உறுதியானவுடன், சர்வதேச மீடியாக்களுக்கு சொர்க்கமாக தெரிந்தது, ஆப்கான். காரணம், அமெரிக்க ராணுவம் தலிபான்களுடன் யுத்தம் புரிய தொடங்கியவுடன், விறுவிறுப்பான செய்திகள் ஏராளமாக கிடைக்கும் அல்லவா?

இதனால், ஆப்கானுக்குள் தமது செய்தியாளர்களை அனுப்பி வைக்க சர்வதேச ஊடகங்கள் பலவித முயற்சிகளை செய்தன. பாகிஸ்தானில் பதிவு செய்துள்ள 450 செய்தியாளர்கள் ஆப்கனிஸ்தானுக்குள் செல்லத் தயாராக இருப்பதாக அக்டோபர் 1-ம் தேதி ஏ.பி. நியூஸ் ஏஜென்சி தெரிவித்தது. இந்த எண்ணிக்கை எழுநூறையும் தாண்டும் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் எழுதின.

ஆப்கனிஸ்தான் நாட்டுக்கு செல்ல, விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஆனால் பொறுமை இழந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் காத்திருந்தனர் வெளிநாட்டு செய்தியாளர்கள்.

ஆனால், தலிபான் ஆட்சியாளர் முல்லா முகமது ஓமர், வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் ஆப்கனிஸ்தானில் நுழையத் தடை விதித்து எல்லைகளை மூட உத்தரவிட்டு விட்டார். செய்தியாளர்கள் யாருக்கும் உள்ளே வர அனுமதி கிடையாது.

தலிபான் ஆட்சியாளர் முல்லா முகமது ஓமருக்கு வெளிநாட்டுப் செய்தியாளர்கள் மீது சந்தேகம் இருந்து வந்தது. அதன் எதிரொலியாக பி.பி.சி. தங்களுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபடுவதாக, தலிபான் வானொலி ஒலிபரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், தலிபான்களின் எதிர்ப்பைச் சற்றும் கண்டு கொள்ளாமல் பி.பி.சி.யின் ஜான் சிம்சன் மற்றும் கேமராமேன் பீட்டர் ஜூவெனாலுடன் பாகிஸ்தானில் இருந்து அதிரடியாக ஆப்கனிஸ்தான் நாட்டுக்குச் சென்று திரும்பினர். இவர்கள் இருவரும் பெண்களை போல வேஷமிட்டு, நீல நிற புர்காவுக்குள் தங்களை மறைத்தபடி சென்ற அவர்களை தலிபான்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால், இதே பாணியில் ஆப்கனிஸ்தானுக்குள் செல்ல முயன்ற மற்ற செய்தியாளர்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை. பாகிஸ்தான் எல்லையைக் கடந்து ஆப்கனிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்த சண்டே எக்ஸ்பிரஸ் செய்தியாளரான யோவோன் ரிட்லேவை அமெரிக்க உளவாளி என்று குற்றம்சாட்டி தலிபான்கள் கைது செய்தனர்.

ஆப்கனிஸ்தான் நாடு மீது அமெரிக்க படைகள் நடத்தும் தாக்குதல் குறித்த செய்திகளைச் சேகரிக்க, ஆப்கனுக்குள் செல்ல வேண்டும். அதற்கு வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு ஒரே வழிதான் இருந்தது. தலிபான்களை கதி கலங்கச் செய்து ஆப்கனிஸ்தானின் ஒரு பகுதியைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த வடக்கு கூட்டணியின் உதவியை நாடுவதுதான் அது.

அக்டோபர் 1-ம் தேதி, ஆப்கனிஸ்தானின் அண்டை நாடான தஜிகிஸ்தான் நாட்டில் இருந்து 250 செய்தியாளர்கள் வடக்குக் கூட்டணியின் உதவியுடன் ஆப்கானில் வடக்கு கூட்டணியின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிக்குள் நுழைந்து விட்டனர்.

ஆனால், தலைநகர் காபுலுக்கு செல்ல முடியவில்லை.

ஆப்கனிஸ்தானில் சர்வதேச தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. காபூலில் இருந்த செய்தி ஏஜன்ஸிகளை சேர்ந்த செய்தியாளர்கள் மூவர் மட்டும் சாட்டிலைட் போன்களை வைத்திருந்தனர். இந்த போன்கள் மூலம் தினமும் நான்கைந்து முறை, இஸ்லாமாபாத்தில் உள்ள தங்களது செய்திப்பிரிவைத் தொடர்புகொண்டு செய்திகளை அளித்து வந்தனர்.

செய்திகள் இப்படி வெளியே போவதை தலிபான்கள் தெரிந்து கொண்டார்கள். “செயற்கைக்கோள் போன்களை பயன்படுத்துபவர்கள் தூக்கிலிடப்படுவார்கள்” என்று தலிபான்கள் சட்டம் கொண்டு வந்தார்கள்.

ஆனால் தமாஷ் என்னவென்றால், சாதா போனுக்கும், சாட்டிலைட் போனுக்கும் என்ன வேறுபாடு உள்ளது என்பதை தலிபான்கள் யாரும் அறிந்திருக்கவில்லை. சாட்டிலைட் போன்கள் என்றால், வித்தியாசமான தோற்றத்துடன் இருக்கும் என்று தலிபான்கள் நினைத்திருந்தார்கள். இதனால், அதிர்ஷ்டவசமாக இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அவர்களால் முடியவில்லை.

ஆப்கனிஸ்தானில் கேமரா குழுவை வைத்திருந்த வெளிநாட்டு மீடியா, அல்-ஜசீரா மட்டுமே!

இதனால் அல்-ஜசீரா செய்தி குழுவால் மட்டுமே வீடியோக்களை எடுக்கவும், அவற்றை ஒளிபரப்பு செய்வதற்காக கத்தாருக்கு அனுப்பி வைக்கவும் முடிந்தது. இஸ்லாமிய பாணியில் நீண்ட உடை அணிந்திருந்த அல்-ஜசீரா செய்தியாளர்களை தலிபான்கள் வெளிநாட்டு மீடியா என்ற கணக்கில் எடுக்கவில்லை. அதனால், அல்-ஜசீரா செய்தியாளர்கள் ஆப்கானுக்குள் எடுக்கப்பட்ட விடியோக்களை தாராளமாக வெளியே அனுப்பி, தமது சேனலில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.

காபூல் நகரில் அல்-ஜசீராவின் செய்தியாளராக டாய்சிர் அலுனியும், தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியான காந்தஹாரில் முகமது அல்&புரினியும் செய்திகளைச் சேகரித்து வந்தனர். அவர்கள் இருவரும் தினசரி எடுக்கும் நேரடி படக்காட்சிகளை காபூலில் இருந்து செயற்கைக்கோள் இணைப்பு (அப் லிங்க்) மூலம் தோகாவில் (கத்தார்) உள்ள ஸ்டூடியோவுக்கு அனுப்பி வந்தனர்.

அல் ஜசீரா தொலைக்காட்சி 10 முதல் 12 மீற்றர் குறுக்களவு உள்ள வட்ட வடிவ டிஷ் ஆண்டனாக்கள் மூலம் காபூலில் இருந்து படக்காட்சிகளை செயற்கைக்கோளுக்கு அனுப்பி வந்தது. இதனால், அவர்களது ஒளிபரப்புக்கு மிக தெளிவான படக்காட்சிகள் கிடைத்து வந்தன.

வேறு எந்தத் தொலைக்காட்சியும் ஆப்கனிஸ்தானில் இது போன்ற சேட்டிலைட் அப்லிங்க் அமைப்பையோ, படங்களை அனுப்பும் வசதியையோ கொண்டிருக்கவில்லை.

ஆப்கனிஸ்தான் நாட்டில் இருந்து போர்க்காட்சிகளை உடனுக்குடன் ஒளிபரப்ப அல்-ஜசீராவுக்கு கிடைத்த இந்த வசதியை அதன் போட்டி அரபு சேனல்களும் ஏற்படுத்திக் கொள்ள தீவிரமாக முயன்றன. அரபு மொழி செய்தி ஒளிபரப்பில் அல்-ஜசீராவின் போட்டி சேனல் என்று கருதப்படும் அபுதாபி தொலைக்காட்சி மிக கடுமையாக முயற்சித்தது.

ஆனால், அவர்களால் முடியவில்லை. அபுதாபி தொலைக்காட்சி ஆப்கனிஸ்தான் செய்திகளை, பாகிஸ்தான் நாட்டிலுள்ள பெஷாவர், இஸ்லாமாபாத் நகரங்களில் இருந்தே எடுத்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. இதனால், நேரடிக் காட்சிகள் எதுவும் அவற்றில் இருக்காது. இதனால் தொடர்ந்தும் ஆப்கனிஸ்தான் நாட்டுக்குள் தனிக்காட்டு ராஜாவாக அல்-ஜசீரா இருந்தது.

அல்-ஜசீராவின் தலைமை எடிட்டர் இப்ராகிம் ஹிலால் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டியில், “தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இயங்கும் ஒரே தொலைக்காட்சி அல்-ஜசீராதான்” என்று பெருமையுடன் தெரிவித்தார்.

அவர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மைதான். ஆப்கனிஸ்தான் நாட்டுக்குள் எடுக்கப்படும் படங்கள், பேட்டிகள், கட்டுரைகள் என அனைத்து வகை செய்திகளும் அல்-ஜசீராவுக்கு மட்டுமே கிடைத்தன. தலிபான் அதிகாரிகளின் பேட்டிகள் தினசரி ஒளிபரப்பப்பட்டன. ஆப்கானுக்குள் நிலைமை மோசமாகி வந்த வேளையில் தலிபான் அதிகாரிகளின் தினசரிப் பேட்டிகள் அல்-ஜசீராவுக்கு மதிப்பு வாய்ந்த அரசியல் செய்திகளாக மாறின.

மற்றொருபுறத்தில் விறுவிறுப்பான சில சம்பவங்களை அல்-ஜசீரா செய்தியாளர் டாய்சிர் அலுனி தினமும் கொடுத்துக்கொண்டிருந்தார். உதாரணமாக, அமெரிக்க ஆளில்லா உளவு விமானத்தை தலிபான்கள் கனரக எந்திர துப்பாக்கிகள் மூலம் சுட்டு வீழ்த்திய செய்தி, விமானம் வீழ்ந்து அரை மணி நேரத்தில் ஒளிபரப்பாகிறது, விமானத்தை தலிபான்கள் எப்படி சுட்டு வீழ்த்தினார்கள் என்ற டாய்சிர் அலுனியின் வர்ணனையுடன்.

மற்றொரு நாள் ஒளிபரப்பான சிறப்பு செய்தியில், காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தலிபான்கள் நுழைந்தது எப்படி என்று விலாவாரியாக விளக்கத்துடன் வந்தார் அல்-ஜசீரா செய்தியாளர் டாய்சிர் அலுனி

பின்லேடனை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்கா விடுத்த போது, இது குறித்து விவாதிக்க தலிபான் தளபதிகளின் கூட்டம் ஒன்று நடந்தது. அப்படியொரு கூட்டம் நடக்கிறது என்ற விபரமே, எந்த மேலை நாட்டு மீடியாவிலும் வெளியாகவில்லை. ஆனால், அந்தக் கூட்டத்தை அல் ஜசீரா நேரடி ஒளிபரப்பு செய்தது.

அதன் பின்னர்தான், மற்ற சர்வதேச மீடியாக்கள் விழித்துக் கொண்டன. இந்தக் கூட்டம் குறித்த தகவல்கள் ஒளிபரப்பாகின.

ஒசாமா பின்லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது என தலிபான்களால் முடிவு எடுக்கப்பட்டது அந்தக் கூட்டத்தில்தான். அதைத் தொடர்ந்துதான், சமாதான முயற்சிகளுக்கான கதவுகள் அடைபட்டன. அமெரிக்கா, ஆப்கனிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது என்ற நிலை உறுதி செய்யப்பட்டதும் அந்தக் கூட்டத்தின் பின்னர் தான். தலிபான்கள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தத் தயாராகியதும், அதே கூட்டத்தின் பின்னர்தான்.

உலகின் வேறு எந்த மீடியாவிலும், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற போகிறது என்ற செய்தியே வெளிவராத நிலையில், கூட்டம் நடப்பதையே அல்-ஜசீரா நேரடியாக ஒளிபரப்பு செய்ததில், அல்-ஜசீராவின் செல்வாக்கு ஓவர் நைட்டில் ஜிவ் என்று உயர்ந்தது.

அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள், ஆப்கனிஸ்தான் மீது போர் தொடுப்பது தவிர்க்க முடியாததாக மாறியது. போர் சூழல் குறித்த அனைத்து தகவல்களையும் சிறப்புச் செய்திகளாகச் சேகரித்து ஒளிபரப்புவதில் அல்-ஜசீரா மும்முரமாக இருந்தது. அமெரிக்காவோ, தாம் யுத்தம் செய்யப்போகும் இடத்தில் இருந்து வெளியாகும் செய்திகளை கவனமாக கவனிக்க தொடங்கியது. அந்த செய்திகளை வெளியிடும் மீடியாக்களின் ஒளிபரப்புகளை அமெரிக்க நிர்வாகம் தீவிரமாகக் கண்காணித்தது.

இந்த நிலையில் அல்-ஜசீரா, அமெரிக்க அரசின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் வந்தது. அல்-ஜசீரா வெளியிட்ட சில செய்திகள் அமெரிக்காவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தின.

உதாரணமாக, ஆப்கான் எல்லைக்கு அருகே தலிபான் நிலைகளைக் கண்காணித்த அமெரிக்க சிறப்பு கமாண்டோ படை வீரர்கள் 5 பேரை தலிபான்கள் உயிருடன் பிடித்துச் சென்ற தகவலை அமெரிக்க ராணுவம் தமது பிரஸ்டீஜ் இஷ்யூவாக பார்த்து, இருட்டடிப்பு செய்ய முடிவு செய்தது. ஆனால், அமெரிக்க சிறப்பு கமாண்டோ படை வீரர்கள் தலிபான்களால் பிடித்துச் செல்லப்பட்டு சில மணி நேரத்திலேயே அந்த செய்தி அல்-ஜசீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

அல்-ஜசீராவை மேற்கோள் காட்டி, அமெரிக்க மீடியாக்களும் இந்த செய்தியை வெளியிட்டன.

இந்தச் செய்தி அமெரிக்க நிர்வாகத்தைக் கொந்தளிக்க வைத்தது. “எமது கமாண்டோ வீரர்கள் தலிபான்களிடம் உயிருடன் சிக்கிய செய்தி உண்மையல்ல” என அமெரிக்க அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்தனர்.

தோகாவில் உள்ள அமெரிக்க தூதர், தோகாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அல்-ஜசீராவில் ஒளிபரப்பான செய்தி குறித்து முறைப்படியான புகாரை கத்தார் நாட்டு வெளியுறவு அமைச்சரிடம் அளித்தார். “அல்-ஜசீரா, அல்-காய்தா ஆதரவு மீடியா” என்று தமது புகாரில் தெரிவித்த அமெரிக்க தூதர், அதற்கு ஆதாரமாக, “பின்லேடன் மகனின் திருமணத்தில் அல்-ஜசீரா நிருபர் அகமது சைடான் கலந்து கொண்டதாக எம்மிடம் தகவல் உள்ளது” என்றார்.

“பின்லேடன் மகனின் திருமணத்துக்கு, மீடியா என்ற முறையில் தமது நிருபர் அழைக்கப்பட்டார். அதில் தப்பு ஏதுமில்லையே என்று தெரிவித்த அல்-ஜசீரா, அமெரிக்க வீரர்களை கடத்திச் சென்ற தகவலை, தலிபான்கள்தான் நம்பகமான வகையில் தமக்கு தெரிவித்தனர் என்று அறிவித்ததுடன், தாம் வெளியிட்ட செய்தியையும் உறுதிப்படுத்தியது.

அல் ஜசீராவின் இந்த உறுதிப்படுத்தல் பதில் அமெரிக்காவை மேலும் கங்கடத்துக்குள் தள்ளியது. அதையடுத்து அமெரிக்க நிர்வாகம், அல் ஜசீராவின் ஒளிபரப்பை சிதைக்கும் முயற்சியில் இறங்கியது.

முதல் கட்டமாக, அல்-ஜசீராவில் ஒளிபரப்பான காட்சிகளை அமெரிக்க தொலைக்காட்சிகள் பெற்று மறு ஒளிபரப்பு செய்வதைத் தடுக்கும் முயற்சிகளில் அமெரிக்க நிர்வாகம் இறங்கியது. (…தொடரும்)



விறுவிறுப்பு.காம்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல