திங்கள், 15 பிப்ரவரி, 2010

எப்போதெல்லாம் செக்ஸ் கூடாது என்பதற்கு மருத்துவர்கள் கொடுக்கிற பட்டியல்?

உடல்நலக் கோளாறு காரணமாக படுக்கையில் ஓய்வெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட பெண்கள் அந்த ஓய்வுக் காலம் முடிகிற வரை செக்ஸைத் தவிர்ப்பது நலம். குறிப்பாக இதயம் சம்பந்தப் பட்ட பிரச்சினைக்கான சிகிச்சையில் இருப்பவர்கள் கட்டாயம் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண்களுக்கும் குறிப்பிட்ட காலம் வரை செக்ஸ் உறவைத் தவிர்க்கச் சொல்லியே அறிவுறுத்தப்படும். அறுவை செய்த காயம் முழுவதுமாக ஆறும் வரை செக்ஸ் கூடாது என்பார்கள் மருத்துவர்கள்.

இருவரில் யாராவது ஒருவருக்குப் பால்வினை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டாலோ, அப்படி இருக்குமோ என்கிற சந்தேகம் இருந்தாலோ கூட செக்ஸ் உறவு கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். இந்தக் கண்டிஷன் எய்ட்ஸுக்கு மட்டுமின்றி எல்லா விதமான பால்வினை நோய்களுக்கும் பொருந்துமாம்.

தம்பதியர் இருவரில் ஒருவருக்குத் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் (அம்மை, சரும நோய் உள்பட) இருந்தாலும் அவர்கள் செக்ஸ் உறவைத் தவிர்க்க வேண்டும். அந்த நோய் முற்றிலும் குணமாகிற வரை அல்லது அது மற்றவருக்குத் தொற்றாது என்கிற நிலை உண்டாகும் வரை உறவு தவிர்க்கப்படுவது பாதுகாப்பானது என்கிறார்கள் மருத்துவர்கள்.

உறவின் போது வலியை உணர்ந்தால், உடனடியாக அந்த உறவு நிறுத்தப்பட வேண்டுமாம். வலி என்பது ஒருவரது உடலில் உண்டாகியிருக்கிற ஏதோ ஒரு பிரச்சினைக்கான அலாரம் மாதிரி. அதை சகித்துக் கொண்டு உறவைத் தொடர்கிற பட்சத்தில் விளைவுகள் வேறு மாதிரி மாறலாம்.

மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட தம்பதியர் செக்ஸ் உறவிலிருந்து விலகியிருப்பது நல்லது. அளவுக்கதிக மன உளைச்சல், மனச்சோர்வு, படபடப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் அடக்கம்.

கர்ப்பம் தரித்த ஆறாவது வாரம் முதல் பனிரெண்டாவது வாரம் வரை தாம்பத்திய உறவைத் தவிர்ப்பது கருச்சிதைவிலிருந்து காப்பாற்றும் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள். கர்ப்ப காலத்தின் கடைசி இரண்டு மாதங்களும் அதைத் தவிர்ப்பது நல்லது. கடைசி மாதங்களில் கொள்கிற உறவானது, பனிக்குடத்தை உடையச் செய்து, ஆபத்தை உண்டாக்கலாம் என்பதே காரணமாம். பிரசவத்துக்குப் பிறகு முதல் ஆறு வாரங்களுக்கு செக்ஸ் வேண்டாம் என்பதே மருத்துவர்களின் பொதுவான அட்வைஸ். அதன் பிறகு அந்தத் தாயின் உடல் பரிசோதிக்கப்பட்டு, பிரச்சினைகள் இல்லை என்று உறுதியளிக்கப்பட்ட பிறகே செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

தம்பதியருக்குள் சண்டை, சச்சரவு நிகழும் போது, அதற்கான ஒரு சமாதான நடவடிக்கையாக செக்ஸ் உறவைக் கையிலெடுப்பவர்களே அதிகம். மிகப்பெரிய சண்டையைக் கூட அந்த உறவு சமாதானத்துக்குக் கொண்டு வந்து விடுவதுண்டு. ஆனால் உண்மையில் இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பிரச்சினைக்கான தீர்வு முதலில் காணப்பட வேண்டும். மனங்கள் லேசாக வேண்டும். மனத்தளவில் இருவரும் நெருக்கமாக உணர்ந்த பிறகே உடலளவிலான நெருக்கம் தொடர வேண்டும். இல்லாதபட்சத்தில் காலப் போக்கில் அது அந்த தம்பதியருக்கிடையேயான நெருக்கத்தையே சிதைக்கிற வாய்ப்புண்டாம்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல