சிறைச்சாலை தலைமை அதிகாரி அனுர ஏக்கநாயக்க தலைமையில் நடைபெற்ற மேற்படி வைபவத்தில் பிரதி அமைச்சர் தொடர்ந்து பேசுகையில், நீதிமன்றங்களினால் குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் அபராதப் பணத்தை செலுத்தத் தவறுவோர் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடுகின்றது. விதிக்கப்படும் அபராதப் பணத்தை விட இரு மடங்கு பணத்தை சிறைத் தண்டனை அனுபவிப்பவர்களுக்கு செலவு செய்யக் கூடிய நிலை ஏற்படுகின்றது. இப்பணம் பொது மக்களுடையதென்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
இது போன்ற சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பாக நீதிமன்றங்களினால் இரு வருடங்களுக்கு குறைவான காலங்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுகின்றது. இவர்களை சிறையில் வைத்திருப்பதன் மூலம் அவர்களுக்கு பெருந்தொகைப் பணம் செலவு செய்யப்படுகின்றது.
இதனைத் தவிர்த்து அத்தகைய கைதிகள் தத் தம் வீடுகளிலேயே தங்கியிருந்து தண்டனையை அனுபவிக்க முடியும். இது சம்பந்தமான தீர்க்கமாக ஆலோசனை செய்து வருகின்றோம்.
நீதிமன்றங்களினால் இரு வருடங்களுக்கு குறைவான காலத்திற்கு சிறைத் தண்டனையைப் பெறும் கைதிகள் கோவில், விகாரை, பள்ளிவாசல் போன்ற புனித ஸ்தலங்கள் மற்றும் பொது இடங்கள் ஆகியவற்றில் கண்டிப்பான சேவைகளை ஆற்ற வேண்டும். இச் சேவையானது தண்டனைக் காலமாகவே கருதப்படும். சிறைச்சாலைகளுக்குள் தண்டனையை அனுபவிக்காமல் வீட்டிலிருந்தவாறே மேற்குறிப்பிட்ட தண்டனையை பொதுச் சேவையாக மேற்கொள்ள முடியும். இது காலத்திற்குத் தகுந்த தண்டனையாகவே கருதப்படுகிறது.
இது போன்ற தண்டனைகள், அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவுள்ளன. இதன் மூலம் சிறைச்சாலைகளில் தண்டனை பெறும் கைதிகளுக்கு செலவு செய்யப்படும் பெருந்தொகைப் பணத்தை மீதப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக