அப்பாத்துரை விநாயகமூர்த்தி பாராளுமன்றில் இன்று உரையாற்றியவை,
2011 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகின்றமைக்கு வாய்ப்பளித்தமைக்காக முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவினங்களுக்காக ரூபாய் 214 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 2010 ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவினத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து 13 பில்லியன் ரூபாய் அதிகரிக்கப்பட்டிருக்கின்றமையையும் நாம் காண்கின்றோம்.
முன்பு 2010 ஆம் ஆண்டில் ரூபாய் 201 பில்லியனும், 2009 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவினத்தில் இருந்து ரூபாய் 177 பில்லியனும் மட்டுமே பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தன. அடுத்த ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 75 பில்லியன் ரூபாயும், சுகாதார அமைச்ச்சுக்கு 62 பில்லியன் ரூபாயும், கல்வி அமைச்சுக்கு 31 பில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சுக்கு ஏன் இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது? என்பது எமக்குத் தெரியவில்லை.
தற்பொழுது யுத்தம் முடிவுக்கு வந்து - சமாதான சூழல் நிலகின்ற நிலையில் நல்லிணக்கத்தை நோக்கிய செயல் திட்டத்தில் இவ்வளவு பெரிய தொகை பாதுகாப்புச் செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கக் கூடாது. மக்கள் எதிர்நோக்கும் உண்மையான பிரச்சினை வாழ்க்கைச் செலவின அதிகரிப்பே ஆகும். ஆனால் இந்த வரவு செலவுத் திட்டத்தில் மக்களது வாழ்க்கைச் செலவினத்தை குறைக்கக் கூடிய ஆக்கபூர்வமான முன்மொழிவுகள், கருத்திட்டங்கள் எவையும் உள்ளடக்கப்பட்டு இருப்பதாகத் தெரியவில்லை.
நுகர்வோர் பலமாக வயிற்றில் அடிக்கப்படுகிறார்கள். சாதாரணமானதும் எளிமையானதும் அதிக செலவற்றதுமான சோறு, கறி ஆகியவற்றை ஆக்கி உண்கின்றமை என்பது கூட ஒரு குடும்பத்துக்கு இன்று ஒரு பாரிய பிரச்சினையாக உருவாகி உள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மீதான வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது. வரவு-செலவுத் திட்டங்களின்போது உற்பத்திப் பொருட்களது விலைகள் அதிகரிக்கப்படுகின்றமையே வழமையாக இருந்து வந்துள்ளது.
ஆனால் இந்த வரவு செலவுத் திட்டத்தில் விலை உயர்வுகள் தொடர்பில் எதுவும் செய்ய முடியாதிருப்பது தெரிகின்றது. யுத்தம் முடிவுறுத்தப்பட்டு ஏறக்குறைய ஒன்றரை வருடங்கள் கடந்த பின்பும் இலங்கையில் நுகர்வோர் மாதந்தம் சுயமாக விரும்பியவாறு கொள்வனவை மேற்கொள்ள முடியாத நிலையிலேயே உள்ளனர்.
வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் மாத வருமானத்தின் மூலம் செலவினத்தை ஈடு செய்ய முடிவது இல்லை. சனத்தொகை மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி 2001 ஆம் ஆண்டிலிருந்து இற்றை வரை அதிகரித்த வாழ்க்கைச் செலவினத்தாலும், குறைந்த வருமானத்தாலும் மக்களது கொள்வனவு வலு 60 வீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளது.
மேலும் இச்சனத்தொகை மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் கூற்றுக்கு அமைய செப்டெம்பர் மாதத்துக்கான செலவுப் பொதி ரூபாய் 39, 721.62 என்பதுடன் அரச துறைப் பணியாளர் ஒருவரது மிகக் குறைந்த மாதாந்தப்படி ரூபாய் 16,980 உம், தனியார் துறைப் பணியாளர் ஒருவரது மாதாந்தப்படி ரூபாய் 6,750 உம் ஒரு தோட்டத் தொழிலாளியின் நாளாந்தப் படி ரூபாய் 290 உம் ஆகக் காணப்படுகின்றது.
2006 ஆம் ஆண்டில் இதே மாதாந்த செலவுப் பொதி ரூபா 24,344.00 எனக் கணிப்பிடப்பட்டு இருந்தது. 2006 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரையில் மாதாந்த செலவுப் பொதி ரூபாய் 14,377.62 ஆல் அதிகரிக்கப்பட்டிருப்பதைக் காண்கின்றோம்.
இதற்கு இடையில் 2009 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கைப்படி ஓர் இலங்கையரின் சராசரி மாதாந்த வருமானம் ரூபாய் 17,109.00 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசினால் வெளியிடப்பட்டுள்ள இப்புள்ளி விபரங்கள் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் இலங்கைக் குடிமக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை தெளிவாகக் காட்டி நிற்கின்றன.
அரசு வர்த்தகம் செய்ய கூடாது கடந்த 25 வருடங்களாக ஆட்சியில் இருந்த சகல அரசுகளும் பொருண்மிய நிறுவனங்களை செயற்படுத்துவதற்கு அல்லது நடாத்துவதற்கு பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு இருந்தன. மொத்தத்தில் அவை பயங்கர அனுபவங்களே ஆகும்.
இன்றைய நிலையில் உலகளாவிய ரீதியில் அரசுகள் வர்த்தக நிறுவனங்களை நடாத்தக் கூடாது என்பதே பொது அபிப்பிராயமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலாப ஈட்டுகின்றனவோ, இல்லையோ என்பதில் அல்லாது அரச ஸ்தாபனங்களை பொதுமக்களுக்குப் பயனளிக்கக் கூடியவாறு இலகுவாக நடாத்துகின்ற அளவில் அரசு கட்டுப்பட்டு இருக்க வேண்டும்.
வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது அரச கரும் அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அரசானது ஒழுங்குபடுத்தும், உதவி செய்யும் ஓர் அமைப்பாகவே இருக்க வேண்டும். கடந்த பல வருடங்களாக ஆட்சியில் இருந்து வந்த அரசுகள் நட்டத்தில் இயங்கிய கூட்டுத்தாபனங்களை நாட்டு மக்களின் வரிப் பணத்தில் இருந்து இயக்க முனைந்து நூற்றுக்கணக்கான மில்லியன் ரூபாயை வீண் விரயம் செய்து விட்டன.
நாடாளுமன்றத்தின் கீழ் வரும் பொது நிறுவனங்கள் மீதான குழுவின் அறிக்கைகள் இவற்றை நிரூபிக்கின்றன. வர்த்தகத் துறையில் சாதுரியம் அற்ற அரசியல்வாதிகள் அரசை நடாத்த முயற்சிக்கின்றமையாலேயே அரசு வர்த்தகத் துறையில் தோல்வியையே கண்டு வருகின்றது. முன்னேற்றகரமான சமூகக் கட்டமைப்பை ஆதரிக்கும் ஒழுங்கு விதிகளை ஆக்குவதும்-அமுலாக்குவதும் அரசின் கடமையே ஆகும்.
முதலாளித்துவம் சரியான முறையில் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிந்துள்ளோம். ஜனநாயகத்தைப் பற்றிக் குறிப்பிட்ட பிரபல அறிஞர் வின்சன்ட் சர்ச்சில் ஏனைய அனைத்து முறைமைகளிலும் மிகக் கீழ்த்தரமானது பொருளாதார முறைமையே என்று கூறியுள்ளார். எச்சரிக்கை உதாரணமாக ஐந்து பெரும் நட்டத்தை உருவாக்கும் நிறுவனங்கள் நிதியமைச்சரால் வகைப்படுத்தப்பட்டன.
ஸ்ரீலங்கன் எயார் லைன் நிறுவனத்தினால் 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட நட்டம் 49 பில்லியன் ரூபாய். தபால் திணைக்களத்தால் 2.4 பில்லியன் ரூபாயும், இலங்கை மின்சார சபையால் 7.4 பில்லியன் ரூபாயும், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் 12.3 பில்லியன் ரூபாயும், புகையிரத திணைக்களத்தால் 4.8 பில்லியன் ரூபாயும் கடந்த 2009 ஆம் ஆண்டு நட்டங்களாக கொள்ளப்பட்டன.
இலங்கையின் பிரசித்தி பெற்ற செலவு குறைந்த விமானசேவை என்று கூறப்பட்ட மிகின் எயார் இவ்வளவு வருட காலத்தில் அதி உயர் நட்டமாக 930 மில்லியன் ரூபாயை இழக்க வைத்துள்ளது. கடந்த வருடங்களில் ஏற்கனவே இதனால் அரசுக்கு ஏற்பட்ட நட்டம் 3 பில்லியன் ரூபாய் ஆகும்.
இலங்கையைப் பொறுத்த வரையில் இப்பொது வர்த்தக நிறுவனங்கள் இலாபம் ஈட்டும் போக்கில் இல்லாமல் நட்டத்தில் இயங்குவது என்பது ஒன்றும் புதிய விடயம் அல்ல. உண்மையில் இந்நிறுவனங்கள் தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்கி வந்துள்ளன என்பதுடன் இழப்புக்கள் மக்கள் பணத்தில் இருந்தே ஈடு செய்யப்பட்டுள்ளன.
உதாரணமாக இரண்டு போக்குவரத்து அமைப்புக்களாகிய புகையிரத சேவையும், இலங்கைப் போக்குவரத்துச் சபையும் 2000 ஆம் ஆண்டுக்குப் பின்பு 2009 ஆம் ஆண்டு வரை மொத்தமாக உருவாக்கி உள்ள நட்டங்கள் முறையே 31.3 பில்லியன் ரூபாயும், 30.3 பில்லியன் ரூபாயும்.
இந்நிறுவனங்களை ஒரு தனியார் கம்பனி நடாத்தி இருந்தால் இவ்வாறு வங்குரோத்தாகி இருக்காது. எது எப்படியோ மக்களது வரிப் பணத்தில் இருந்து இழப்புக்கள் ஈடு செய்யப்படுகின்றபடியாலும், இரண்டு அரச வங்கிகளில் இருந்து அரச உத்தரவாதத்தில் உயர் வட்டி வீதத்தில் பெறப்பட்ட கடன்களுக்கான வட்டிகளை மக்களது வரிப் பணத்தில் இருந்து செலுத்துவதனாலும் அரசால் இந்நிறுவனங்களை இயக்க முடிகின்றது.
அண்மையில் சேல் காஸ் கம்பனியை அரசு பொறுப்பேற்றது. விரைவில் இதுவும் நட்டத்திலேயே இயங்கும் என்பதை இப்போதே நான் எதிர்வு கூறுகின்றேன். உயர் பாதுகாப்பு வலயம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனம் கொண்டு வரப்பட்ட பகுதிகள் தொடர்பாகவும், எப்பொழுது கொண்டு வரப்பட்டன? என்பது தொடர்பாகவும் பாதுகாப்பு அமைச்சர், எனக்கோ அல்லது இந்த கௌரவ சபைக்கோ உரிய விளக்கம் கொடுப்பாரா?
இவ்வுயர் பாதுகாப்பு வலயப் பிரகடனங்கள் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டனவா? உண்மையிலே வடக்கிலே இவ்வாறான உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான பிரகடனத்துக்கு எந்த சட்ட அடிப்படையும் இப்போது இல்லை.
வடக்கின் 30 சதவீத பகுதியான வலி.வடக்கு படையினருடைய ஆதிக்கத்தில் உள்ளதுடன் உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது என்றும் கூறப்படுகின்றது. 48 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டு அமைந்த வலிகாமம் வடக்கில் 28 கிராம சேவகர் பிரிவுகள் படையினரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டுக் காணப்படுகின்றன.
யாரும் சென்று மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை. 12 கிராம சேவகர் பிரிவுகளிலேயே மக்கள் முழுமையாக குடியமர்ந்துள்ளனர் என்பதுடன் 05 கிராம சேவகர் பிரிவுகளில் பகுதியளவிலேயே மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
பலாலி விமான நிலையம், பலாலி ஆசிரியர் கலாசாலை, மயிலிட்டி மீன்பிடித்துறை, மயிலிட்டி இருதய சிகிச்சை வைத்தியசாலை, காங்கேசன்துறை துறைமுகம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம், மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயம், தெல்லிப்பளை மாவட்ட வைத்தியசாலை, தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஆகியவை உயர் பாதுகாப்பு வலயம் என்றழைக்கப்படும் பகுதியினுள்ளேயே அடங்குகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.
வலிகாமம் வடக்கு, மண்டைதீவு, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புத்துறை வரையான பகுதி, கரம்பகம், எழுதுமட்டுவாள் வடக்கு-தெற்கு, நாகர்கோவில், மற்றும் மறுவன்புலவு ஆகிய பகுதிகளும் உயர் பாதுகாப்பு வலயம் என்றழைக்கப்படும் பகுதிக்குள்ளேயே அமைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த 100,000 பேரும் தென்மராட்சியில் இருந்து இடம்பெயர்ந்த 100,000 பேரும் மீளவும் சொந்த இடங்களுக்குச் சென்று குடியமர்கின்றமைக்கு உயர் பாதுகாப்பு வலயம் என்று அழைக்கப்படும் பிரகடனத்தின் காரணமாக அனுமதி இல்லை.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நாங்கள் தொடர்ந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. ஆனால் யாழ். மாவட்ட அரச அதிபர் இமல்டா சுகுமார் அண்மையில் ஜேர்மனியில் இருந்து வருகை தந்திருந்த பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றில் யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயம் என்று எதும் இல்லை என்றும் கண்ணிவெடி அகற்றப்பட வேண்டிய இடங்களே காணப்படுகின்றன என்றும் கூறி இருந்தமையை இங்கு நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
அரச உயர் பதவியில் இருக்கும் ஒரு தமிழ்ப் பெண்மணி இவ்வாறு அப்பட்டமாக பொய் கூறி வரும் துர்ப்பாக்கிய நிலையை இட்டு நான் மிகவும் மனம் வருந்துகின்றேன். இனி மேலாவது வாயைத் திறக்கும் முன்பு அவர் சரியான தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவரை சொந்த இடத்தில் மீளக் குடியமர விடாது மறுக்கின்றமை அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.
மண்டைதீவு மண்டைதீவில் பிரதான வீதியில் ஒரு கிலோமீற்றர் தூரம் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் 1ஆம் வட்டாரத்திலிருந்து 5ஆம் வட்டாரம் வரையான பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.
உயர் பாதுகாப்பு வலயம் என்று அழைக்கப்படும் இப்பகுதியில் எறக்குறைய 75 வீடுகளில் கடல் படையினர் தொடர்ந்தும் குடியிருக்கின்றனர். ஏறக்குறைய 1500 குடும்பங்கள் மண்டைதீவில் இருந்து இடம்பெயர்ந்து வன்னிக்குச் சென்றன. இப்பொழுது வன்னியில் இருந்து திரும்பி வந்தவர்களும், ஏனையவர்களும் 6ஆம், 7ஆம் வட்டாரங்களில் பொது நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டிடங்களிலேயே தங்கியுள்ளனர். இவர்கள் பரிதாபகரமான நிலையிலேயே அங்கு வாழ்கின்றனர்.
மண்டைதீவிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் மீளக்குடியமர விரைவில் அனுமதிக்கப்படல் வேண்டும். இராணுவத்தினரை வெளியேற்றுதல் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஏறக்குறைய ஒரு இலட்சம் படையினர் வடக்கில் நிலை கொண்டிருந்தனர். அவர்கள் இன்றும் அங்கேயே தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளனர்.
சீன அரசின் உதவியுடன் வடக்கிலே இவர்களுக்கு குடியிருப்புக்கள் அமைத்துக் கொடுக்கப்பட உள்ளன என ஒரு பத்திரிகைச் செய்தியின் மூலமாக அறிகிறேன். இலங்கைதான் ஆசியாவிலேயே மிகவும் இராணுவமயம் ஆக்கப்பட்ட நாடாக காணப்படுகின்றது. இயல்பு நிலை, இராணுவ ஆட்சியிலிருந்து விடுதலை ஆகியனவே இப்பொழுது தமிழர்களது தேவைகளாக உள்ளன.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக