புதன், 24 நவம்பர், 2010

சூகியின் விடுதலை மியான்மாருக்கு ஜனநாயகத்தைக் கொண்டு வருமா?

மியன்மார் எதிர்கட்சித்தலைவி ஆங்ஸான் சூகியின் விடுதலை அவரது தாயக ஆதரவாளர்களால் மட்டுமன்றி உலகிலுள்ள பல நாடுகளாலும் மகிழ்ச்சிபொங்க வரவேற்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை வரையில் நடப்பு உலகில் அதிக பிரபல்யம் பெற்ற சிறைக்கைதி என்ற மகுடத்தை சுமந்திருந்தவர் சூகி என்றால் மாற்றுக்கருத்துக்கள் இருக்கும் என நினைக்கவில்லை ஆங்ஸான்சூகி ஜனநாயகம் மனித உரிமைகள் விடுதலை ஆகியவற்றின் அடையாளமாக நோக்கப்படுவதுடன் ஆசியாவின் பெருமையாகவும் போற்றப்படுபவர்.

பரந்துபட்டரீதியில் நோக்குகின்ற போது பெண்களை நலிவுற்றவர்களாக கருதுகின்ற ஆசிய சமூகக்கட்டமைப்பில் ஆங்ஸான்சூகி ஆக்கிரமிப்பாளர்களால் ஒடுக்கப்பட்டமக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பின் அடையாளமாக நம்பிக்கை ஒளியாக திகழ்கின்றார் என்றாலும் மிகையல்ல சூகியின் விடுதலை ஜனநாயகத்தை நேசிக்கின்ற மக்கள் மத்தியில் நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளமை உண்மைதான்.

ஆனால் விடுதலை பெற்றுள்ள ஜனநாயக ஆதரவு எதிர்க்கட்சித்தலைவியான சூகியின் மீது அளவிற்கதிகமான பெரும் எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருப்பது கடுமையான ஏமாற்றங்களுக்கு வழிகோலலாம் என்ற அபிப்பிராயங்களையும் சர்வதேச ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இதற்கு பர்மாவிற்கும் அதற்கு வெளியிலும் காணப்படுகின்ற நிதர்சன நிலைமைகளே காரணமாகும்.

நோபல் சமாதான பரிசு பெற்ற சூகியின் வீட்டுக்காவலை முடிவுறுத்தும் தீர்மானத்தை எடுத்த மியன்மாரின் ஜுன்டா இராணுவ ஆட்சியாளர்களின் தலைவர் ஜெனரல் தான் ஸ்வேயின் கரங்களிலேயே அந்நாட்டின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் தங்கியுள்ளன.

கடந்த கால வரலாற்றை எடுத்துநோக்குகையில் மியன்மார் இராணுவ ஆட்சியாளன் எதிர்வுகூறமுடியாத செயற்பாடுகளும் மூடநம்பிக்கையில் அதிகமாக தங்கியிருக்கின்ற குணாதிசயங்களும் மியன்மாரின் எதிர்காலம் நிச்சயமற்றதாக தொடர்வதையே கோடிட்டுக்காட்டி நிற்கின்றது. சூகியை விடுதலை செய்தமை மூலம் ஜனநாயத்தை தங்கத்தட்டில் வைத்து இராணுவ ஆட்சியாளர்கள் தாரைவார்த்துக்கொடுப்பார்கள் என்று எவரேனும் எதிர்பார்த்தால் அது தற்போதைய நிலையில் முட்டாள்தனமாகவே நோக்கப்படும் .

சூகியின் விடுதலை இராணுவ ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவானதொரு முடிவேயொழிய ஜனநாயகத்தின் மீதான பற்றுதலின் வெளிப்பாடல்ல.

சூகிக்கு எதிரான அடக்குறையின் கனதியை தளர்த்துமாறு மேற்குலக நாடுகள் மற்றும் 10 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஆசியான் எனப்படும் தென்கிழக்காசிய நாடுகள் அமைப்பு திரும்பத்திரும்ப விடுத்திருந்த இடைவிடா கோரிக்கைகள் குறித்து சற்றேனும் கவனம் செலுத்தியிராத மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் மியன்மாரில் பெரும்பான்மையானோரால் பின்பற்றப்படுகின்ற பௌத்த மதத்தைச் சேர்ந்த பெருமதிப்பு பெற்ற பிக்குமாருக்கு எதிரான கடும் போக்கு அணுகுமுறையினை தளர்த்தியதற்கான சமிக்ஞைகளை ஒருபோதுமே வெளிப்படுத்தியதில்லை.

.ஜனநாயகம் மனித உரிமைகள் தொடர்பாக சர்வதேச சமூகம் குறிப்பாக மேற்குலகம் வெளிப்படுத்தும் கரிசனைகளையிட்டு மியன்மார் ஆட்சியாளர்கள் என்றுமே கவலைகொண்டதுமில்லை அதையிட்டு அலட்டிக்கொள்வதுமில்லை.

புதிய உலக ஒழுக்கில் பொருளாதார வல்லரசுகளாக பெருமுன்னேற்றம் கண்டுருகின்ற சீனாவும் இந்தியாவும் மியன்மாரில் நிறைந்துகிடக்கின்ற இயற்கை கனிம வளங்களைப்பெற்றுக்கொள்வதற்காக பெருமளவு அந்நியச்செலவாணியையும் உதவிகளையும் வழங்கி அந்நாட்டின் இராணுவ ஆட்சியாளரின் பைகளை நிறைத்துக்கொண்டிருப்பதே இதற்கு காரணமாகும்.

மியன்மாரில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஆங் ஸான் சூகியுடன் இணைந்து இராணுவ ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதனை உறுதிப்படுத்த சர்வதேச சகத்திற்கு சீனா உதவும் என நம்புவது மிகவும் கடினமானதாகும்.

இதுவரையில் சீனாவின் அக்கறைகள் எல்லாம் அதன் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைச் சார்ந்ததாகவே இருந்துவருகின்றமைக்கு அதன் செயற்பாடுகளே சான்றுபகர்கின்றன. தற்போதைய நிலையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடென பெருமை கொள்கின்ற இந்தியா கூட சீனாவின் போக்கையே பின்பற்றுவது தெளிவாக புலனாகின்றது.

இப்படியாக இருபெரும் நாடுகளின் ஆதரவு இருக்கின்றநிலையில் நீதி நியாயம் வெளிப்படைத்தன்மை குறித்த அதிருப்தி மற்றும் ஐயுறவு இருக்கும் நிலையிலும் மியன்மாரில் 20வருடகாலத்திற்கு பின்னர் தேர்தலை நடத்திய ஜுன்டா இராணுவ ஆட்சியாளர்கள் தமக்கு மக்களின் நியாயமான ஆணை கிடைத்துள்ளதாக உரிமைகோர முனையக்கூடும்.

இதனை பொருளாதார நலனை மையமாகக் கொண்ட நகரும் புதிய உலக ஒழுங்கில் ஜனநாயகம் மனித உரிமைகளை தமக்குத்தாமே குழிதோண்டிப் புதைத்துக்கொண்டு வருகின்ற மேற்குலக நாடுகளும் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்படலாம்.

யதார்த்தம் இப்படி இருக்கும் போது தற்போது 65வயதைக் கடந்து நிற்கின்ற ஆங் ஸான் சூகி அம்மையார் எவ்வளவு காலத்திற்குத்தான் ஜனநாயகத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்கடியும் என்ற கேள்விகளும் எழாமலில்லை.

.வீட்டுக்காவலில் இருந்து விடுதலைபெற்ற பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் அவர் கூறிய கருத்தே இதற்கு பதிலாக இருக்கின்றது .

மியன்மாருக்கு ஜனநாயகம் வரும் என்ற “நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்'என்ற அவரின் கூற்றே ஜனநாயகத்திற்கான தேடலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் கொடுக்கப்படவேண்டிய செய்தியாகவும் இருக்கின்றது.

ஆங் ஸான் சூகி வாழ்க்கைச் சாராம்சம் 1945: பர்மாவிற்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்த நாயகர்களில் ஒருவரான ஜெனரல் ஆங் ஸான் என்பவருக்கு மகளாக பிறந்தார்

1947: இவரது தந்தை படுகொலை செய்யப்பட்டார்

1960: பர்மாவை விட்டு வெளியேறி இந்தியாவிலும் பின்னர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் கல்விகற்றார் .

1988: தனது நோய்வாய்ப்பட்ட தாயாரைக் கவனித்துக்கொள்வதற்காக தாயகம் திரும்பிய சூகி அப்போது சர்வாதிகாரியாக இருந்த நே வின் என்பருடன் முரண்படநேர்ந்தது.

1989: பர்மிய ஜுன்டா இராணுவ ஆட்சியாளர்கள் மார்ஷல் லோ எனப்படும் இராணுவசட்டத்தை பிரகடனப்படுத்திய நிலையில் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார்.

1990: வீட்டுக்காவலில் இருந்தநிலையில் நடைபெற்ற தேர்தலில் அவரது என்எல்டி எனப்படும் தேசிய ஜனநாயக கட்சி வெற்றியீட்டியது. ஆனால் தேர்தல் முடிவுகளை இராணுவ ஆட்சியாளர்கள் பொருட்படுத்தவில்லை.

1991: நோபல் சமாதானப்பரிசு வழங்கப்பட்டது.

1995: வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டபோதும் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.

2000: மீண்டும் தொடர்ச்சியான வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார்.

செப் 2007: 2003ம் ஆண்டின் பின்னர் பொதுமக்கள் மத்தியில் தன் முறையாக பிரசன்னமாகிய சூகி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பௌத்த பிக்குமாரை வாழ்த்தினார்.

நவம்பர் 2010: சூகியின் என்எல்டி கட்சி மியன்மாரில் 20 வருடங்களின் பின்னர் இடம்பெற்ற தேர்தலை பகிஷ்கரித்தது. காவல் முடிவுறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்.


அருண் ஆரோக்கியநாதர்

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல