புதன், 24 நவம்பர், 2010

தென்கொரியா மீது குண்டுவீசி வடகொரியா கடும் தாக்குதல்!

தென் கொரியாவுக்குச் சொந்தமான தீவு ஒன்றின் மீது நேற்று, வடகொரியா பீரங்கி குண்டுகளை வீசி கடுமையாகத் தாக்கியது. பதிலுக்கு தென்கொரியாவும் வடகொரியா மீது தாக்குதலை துவக்கியுள்ளது. இச்சம்பவத்தில் தென்கொரிய கடற்படை வீரர் ஒருவர் பலியானார். பலர் காயம் அடைந்தனர். இதனால், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது. சீனாவும், ரஷ்யாவும் இந்த பதட்டத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் மேற்குக் கடல் பகுதியில் எல்லைத் தகராறு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தென்கொரியாவுக்குச் சொந்தமானதும், வடகொரிய கடல் எல்லைக்கு மிக அருகில் இருக்கும் தீவுமான, இயாங்பியாங் தீவில் தென்கொரியா சமீப காலமாக தனது ராணுவத்திற்கு பயிற்சி அளித்து வருகிறது.

இப்பயிற்சியை நிறுத்த வேண்டும் என வடகொரியா எச்சரித்தது. ஆனால் தென்கொரியா அதைப் புறக்கணித்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை தொடங்கி ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அத்தீவு மீது வடகொரியா பீரங்கிகள் மூலம் குண்டு மழை பொழிந்தது. இதில், தென்கொரிய கடற்படை வீரர் ஒருவர் பலியானார். வீரர்கள் பலர் காயம் அடைந்தனர்.

அத்தீவில், தென்கொரிய ராணுவ முகாம் தவிர, ஆயிரத்து 300 தென்கொரிய மக்கள் வசிக்கின்றனர். குண்டு வீச்சுக்குப் பின் அவர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். தீவு முழுவதும் புகை மூட்டமாகக் காட்சியளிக்கிறது. வடகொரியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தென்கொரியாவும் குண்டு வீச்சை நடத்தியது.

இதற்கிடையில், இச்சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என ரஷ்யா தெரிவித்துள்ளது. இருநாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அது கூறியுள்ளது. இதே கருத்தை கூறியுள்ள சீனா, இப்பிரச்னை குறித்தும், வடகொரியாவின் யுரேனியம் செறிவூட்டல் விவகாரம் குறித்தும் உடனடியாக சீனா, இரு கொரிய நாடுகள், ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய ஆறு நாடுகள் கூட்டத்தைக் கூட்ட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்தான் வடகொரியா, அணுகுண்டு தயாரிக்க உதவும் யுரேனிய செறிவூட்டலில் ஈடுபட்டிருப்பதாக அறிவித்தது. அதையடுத்து இத்தாக்குதல் சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளது.இத்தாக்குதலை மன்னிக்க முடியாது என தென்கொரியா கூறியுள்ளது. அதேநேரம், "தென்கொரியா தான் முதலில் தாக்கத் துவங்கியது. அதன் பின் தான் நாங்கள் தாக்க ஆரம்பித்தோம்' என்று வடகொரியா மறுப்பு தெரிவித்துள்ளது.இரு நாடுகளின் போக்கையும் உன்னிப்பாகக் கவனித்து வரும் அரசியல் நிபுணர்கள், வடகொரியாவின் அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம், அங்கு அரசியல் தலைமை மாற்ற அறிவிப்பு போன்றவற்றால் இப்பிரச்னை தீவிரமடையக் கூடும் என்று கருதுகின்றனர்.

என்ன தகராறு?

2010, மார்ச் 26: தென்கொரிய போர்க் கப்பல் ஒன்று, வடகொரிய கடல் எல்லைக்கருகில் மூழ்கடிக்கப்பட்டது.
கப்பலில் இருந்த 49 பேரும் பலி.
மே 20 : நீர்மூழ்கி குண்டு மூலம் கப்பலை வடகொரியா மூழ்கடித்ததாக விசாரணைக் குழு அறிக்கை.
ஜூலை- செப்டம்பர்: தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டன. வடகொரியா மீது அமெரிக்கா மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதித்தது.
செப்டம்பர் 29: அதிபர் கிம் ஜாங் இல், தன் மகன் கிம் ஜாங் யுன் என்பவரை அடுத்த அதிபராக்குவதற்கான முன்னேற்பாடுகள்.
அக்டோபர் 29: இருநாட்டு படைகளும் பரஸ்பரம் துப்பாக்கிச் சூடு நடத்தின.
நவம்பர் 12: அமெரிக்க விஞ்ஞானி ஒருவர், வடகொரியாவில் ரகசிய இடம் ஒன்றில் யுரேனியம் செறிவூட்டலில் ஈடுபட்டிருப்பதாக வடகொரியா அறிவித்தது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல