எங்களைப் போன்ற பல பெண்கள் இலங்கையில் பல சிறைச்சாலைகளிலும் கண்ணீருடன் தங்கள் எதிர்காலத்தை இழந்து அடுத்தது என்ன என தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எம்மில் பலர் தங்கள் குழந்தைகளுடன் குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகிய நிலையில் வாழ்கின்றனர்.
இவர்களில் சிலர் கருவிலேயே குழந்தையை சுமக்கும்போது கைதுசெய்யப்பட்டவர்கள்.
சிறையிலேயே தங்கள் குழந்தையைப் பெற்றெடுத்தவர்கள் என்பதையும் மனிதநேய அமைப்புக்களுக்கு தெரிவிக்கின்றோம்.
எங்களில் சிலர் தங்கள் குழந்தைகளுடன் சிறையில் வாடுபவர்கள். இவை தவிர இன்னும் பல பெண்கள் பல சிறைகளில் தங்கள் குழந்தைகளுடன் துன்புற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒரு சில பெண்கள் கைது செய்யப்பட்ட பின்னர் மன நோயாளியானார்கள். எமது விவகாரம் தொடர்பாக பலரும் பல வாக்குறுதிகளை மாத்திரமே தருகின்றவர்களாய் உள்ளனர். கடந்த காலங்களில் அவ்வாக்குறுதிகளைக் கேட்டு ஏமாற்ற மடைந்து விரக்தியான மனநிலையில் உள்ளோம்.
யாரும் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. எல்லாம் பேச்சளவிலேயே உள்ளன. நாம் எமது குழந்தைகளை சிறையில் வைத்துக் கொண்டு வேறு குற்றச்செயல்களுடன் ஈடுபட்டவர்களுடன் ஒன்றாகி சிறை வைக்கப்பட்டிருப்பதனால் பிள்ளைகளின் மனநிலையும் மிகவும் பாதிக்கப்படுகின்றது. அம்மா, அப்பாவை நாம் எப்போது பார்ப்போம்?. அப்பா எங்கே என் பிள்ளைகளின் ஏக்கங்களை எல்லாம் தாங்க முடியவில்லை. அவர்களுக்கு ஆரம்ப கல்வியைக் கூட வழங்க முடியவில்லை.
ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவுகளைக் கூட கொடுக்க முடியவில்லை. சில குழந்தைகள் தங்கள் தகப்பனாரை இறுதி யுத்தத்தில் இழந்தவராயின் தகப்பன் யுத்தத்தில் கை,கால்களை இழந்து அங்கவீனர்களாகவும் காணாமல் போயும் உள்ளனர். நடந்த பிரச்சினைகளுக்கு ஒரு தரப்பினரை குற்றம் கூறுபவர்கள் ஏன் எங்களை அடைத்து வைத்துள்ளார்கள். இருந்தவைகள் எல்லாம் இழந்து போயுள்ள எங்களுக்கு இனி இழப்பதற்கு ஏதும் இல்லை. எம்மில் பெரும்பாலான பெண்கள் திருமணமானவர்கள். சிலருக்கு கணவரும் கூட சிறையில் உள்ளார். இருவரும் வேறு வேறு இடமாக சந்திக்கவே முடியாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் பல பெண்கள் திருமணமாகாமல் இளவயதிலுள்ளவர்கள். இவர்களின் நிலைமைகளை எண்ணிப் பாருங்கள்.
இவ்வயதில் நாம் எமது இளமையை தொலைத்தவர்களாகவும் ஆற்றல் ஆளுமைகள் எல்லாம் முளையிலேயே கருகி விடுவதுமான வாழ்க்கையை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். எப்போது நாம் விடு தலையாகி எம் வாழ்வில் எப்போது வசந்தம் மலரும் என்ற அங்கலாய்ப்புக்களுக்கும் ஏக் கங்களும் எம்மை சூழ்கின்றன. நாம் விடுதலையாகி வீடு போகையிலும் ஒரு பெண் என்ற வகையில் இச்சகத்தில் எமக்கு என்ன பெயர் கிடைக்குமென எண்ணி பாருங்கள்.
இது தவிர வாலிபம் கடந்தும் வயோதிபம் தள்ளாடும் வயதினிலும் சிலர் சிறைவாசம் அனுபவிக்கின்றனர். எங்களை அடைத்து வைத்திருப்பதன் நோக்கம் என்ன? குற்றத்தை எம்மீது சுமத்தி எங்களுடைய தண்டனையைத் தர எண்ணுபவர்கள் எமக்கு வாழ்க்கையைத் தர எண்ணியதுண்டா? ஒவ் வொருவரும் ஒவ்வொரு நாளும் பெற்றோருடன் ஓடிவிளையாடி சந்தோசமாக இருக்க வேண்டிய குழந்தைகள் எந்த சந்தோசம் இல்லாமல் ஒரு சகத்தின் அரவணைப்பு கூட இல்லாமல் சமூகத்தில் இருந்து புறந் தள்ளப்பட்டவர்களாக எந்தவொரு தொடர்பும் இல்லாமல் வாடும் அவர்களின் மனநிலை பாதிக்கப்படுகின்றது.
கடந்த கால யுத்தத்தில் நாம் பாதிக்கப்பட்டு எமது வாழ்க்கையை எப்படி மீளக் கட்டியெழுப்புவதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் சிறைப்பட்டிருக்கின்றோம்.
எமக்கு ஏன் இந்த வாழ்க்கை? இந்த இருள் மயமான சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை உங்களால் ஏற்படுத்திக் கொடுக்க முடியுமென்று நம்புகின்றோம்.
எனவே எமக்கும் எம்மைப்போன்ற அனைவருக்கும் பிணையிலோ அல்லது பொது மன்னிப்பிலோ விடுதலை செய்வதற்கு உதவி செய்யுங்கள் என உங்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.
உலகில் உள்ள பல மனித நேய அமைப்புக்கள் மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான பல முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் இந்த காலகட்டத்தில் உலகில் உள்ள ஒரு பிரதேசத்தில் மனித உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாய் யாருமே கவனிப்பாரற்ற நிலையில் நாங்கள் பல துன் பங்களை அனுபவித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை உலகில் உள்ள அனைத்து மனிதநேய அமைப்புகளும் சர்வதேச மனித உரிமை தினத்திலாவது கவனத்தில் எடுப்பார்களா என நாங்கள் ஏக்கத்துடன் எதிர்பார்க்கின்றோம்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக