எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் ராஜேந்திரன் யோகேஷ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். ராஜேந்திரன் கூலி வேலை செய்து வருகிறார்.
யோகேஷ்வரி மகன் மணிகண்டனை சில நாட்களாக காணவில்லை என, அகதிகள் முகாமில் கூறப்பட்டது. இதுகுறித்து யோகேஷ்வரியின் உறவினர் மகேஷ்வரன் விசாரித்துள்ளார். மகனை அனாதை விடுதியில் சேர்த்துவிட்டதாக யோகேஷ்வரி கூறியுள்ளார்.
யோகேஷ்வரியின் பதிலில் சந்தேகம் அடைந்த மகேஷ்வரன், கிராமத்தின் அதிகாரி ஒருவரிடம் முறைபாடு செய்துள்ளார். இதையடுத்து அந்த அதிகாரி மார்சார்பட்டி காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் அழகுதுரை, யோகேஷ்வரியிடம் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையின்போது யோகேஷ்வரி கூறுகையில், மணிகண்டன் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டதால், சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை. இதனால் மருத்துவ செலவு அதிகமாகிறது. மணிகண்டனுக்கு உடல்நிலை சரியாகும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
இதனால் முகாம் அருகே உள்ள மரத்தடி ஒன்றின் கீழ், குழிதோண்டி உயிருடன் புதைத்துவிட்டேன். பின்னர் யாருக்கும் தெரியாமல் நான் முகாமுக்கு வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு யோகேஷ்வரியை அழைத்துச் சென்று, மணிகண்டனின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர். பின்னர் மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக