தனது பருத்த உடல் காரணமாக ஒஹியோ மாநிலத்திலுள்ள தனது வீட்டின் அறையிலிருந்து வெளியேற முடியாது சிறைப்பட்டிருக்கும் டெறி ஸ்மித் (49 வயது), கடுமையான தலையிடியால் அண்மைக்காலமாக அவதிப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் அவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
ஆனால், சுயமாக அசையவோ திரும்பவோ நிற்கவோ முடியாதவாறு இராட்சத உடலமைப்பைக் கொண்டுள்ள அவரை மருத்துவமனை கதவுகளுக்கு ஊடாகக் கொண்டுசெல்வதோ அல்லது “எம்.ஆர்.ஐ' ஊடுகாட்டும் கருவியில் அவரது உடலை செலுத்துவதோ சாத்திய மில்லாத நிலையில் உள்ளது.
இந்நிலையில், அவரது தீராத நோய்க்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை வழங்க முடியாது மருத்துவர்கள் திணறிவருகின்றனர்.
அசைய முடியாது படுத்த படுக்கையாக இருக்கும் டெறி ஸ்மித்தை அவரது கணவரான மைரனும் (44 வயது) அவரது மூத்த மகளான நஜாஹும் (30 வயது) பராமரித்து வருகின்றனர்.
அவர்களே அவரது உடலை கழுவி உணவூட்டி ஆடைகளை மாற்றி கண்ணும் கருத்துமாகக் கவனித்துவருகின்றனர்.
இது தொடர்பில் டெறிஸ்மித் விபரிக்கையில், “எனது கணவர் என்னைப் பாதுகாக்கும் தேவதூதராக விளங்குகின்றார். வேறு ஆண்களாக இருந்தால் எனது நிலையைக் கண்டு என்றோ கைவிட்டுச் சென்றிருப்பார்கள். ஆனால், மைரன் ஒரு துறவி போன்று வாழ்கின்றார்'' என்று கூறினார்.
டெறி ஸ்மித் (இடது)
டெறி ஸ்மித் தனது சிறு வயது முதற் கொண்டே நிறை கூடிய ஒருவராக விளங்கி வருகின்றார். அவர் தனது 7 ஆவது வயதில் 112 இறாத்தல் நிறையுடையவராக இருந்தார்.பாடசாலையில் கல்வி கற்கும் காலத்தில் தனது உடல் பருமனை அவதானித்து எவரும் தன்னை தமது விளையாட்டுக் குழுவில் சேர்ப்பதில்லை எனக் கூறிய டெறி ஸ்மித், அதுவே தனது நிறை மென்மேலும் அதிகரிக்கக் காராணமாக இருந்ததாக தெரிவித்தார்.
“நாம் எவருமே நாம் எதை உண்கிறோம் என்பதையோ உண்ணும் உணவு எமது உடல் நலத்திற்கு நன்மை செய்யுமா என்பது குறித்து அவதானிப்பதில்லை. ஆனால் ஒருவர் உடற்பயிற்சி செய்யாதவிடத்து அவர் எவ்வளவு ஆரோக்கியமாக உண்டும் எதுவித பயனுமில்லை. அவரது உடலிலுள்ள ஊட்டச்சத்தில் ஒரு கலோரியும் தகனமடையாமல் கொழுப்பாகி அவரது உடலில் சேரும்'' என்று டெறி ஸ்மித் கூறினார்.
அவர் கடந்த 3 வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்தது.
டெறி ஸ்மித்துக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவரான தஷ் சகாபி விபரிக்கையில், “நாம் தற்போது கிளேவ்லாண்ட் மிருகக்காட்சிசாலையில் யானைகளையும் காண்டாமிருகங்களையும் மருத்துவ பரிசோதனை செய்வதற்கு பயன்படுத்தப்பட்டுவரும் “எம்.ஆர்.ஐ' ஊடுகாட்டும் கருவி மூலம் டெறி ஸ்மித்தை பசோதிக்க திட்டமிட்டுள்ளோம். ஆனால், அந்த “எம்.ஆர்.ஐ.' ஊடு காட்டும் கருவியில் மனிதர்களை பசோதனை செய்வதற்கான அனுமதிப்பத்திரம் பெறப்படாததால், சட்டப் பிரச்சினை யொன்றை நாம் எதிர்கொண்டுள்ளோம்'' என்று கூறினார்.









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக