ஷரியன் தேவானி (31 வயது) கடந்த நவம்பர் மாதம் இந்திய வம்சாவளியினத்தைச் சேர்ந்த சுவீடன் பிரஜையான தனது புது மனைவி அன்னியுடன் (28 வயது) தேனிலவைக் கழிக்கச் சென்றபோது அன்னி படுகொலை செய்யப்பட்டார்.
தாம் சென்ற வாடகைக்காரை வழிமறித்த இரு ஆயுததாரிகள் கார் சாரதியை தாக்கி விட்டு காரை ஓட்டிச் சென்றதாகவும் இடை நடுவில் அவர்கள் தன்னையும் காரிலிருந்து தள்ளியதாகவும் ஷரியன் தேவானி தெரிவித்திருந்தார்.
அன்னியின் சடலம் கைவிடப்பட்ட வாடகைக் காரிலிருந்து துப்பாக்கியால் சுடப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கவில்லை.
இந்த படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட தென்னாபிரிக்க பொலிஸார், வாடகை காரின் சாரதி ஸோலா தொங்கா உட்பட மூவரைக் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த மூவர் தொடர்பான வழக்கு தென் ஆபிரிக்க கேப் நகரிலுள்ள நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஷரியன் தேவானி தனது மனைவியைப் படுகொலை செய்வதற்கு தனக்கு 1400 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணத்தை முற்பணமாக வழங்கியதாக ஸோலா தொங்கா (31 வயது) தெரிவித்தார்.
அன்னியின் படுகொலையுடன் தொடர்புடைய மூவருக்கு தலா 18 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரித்தானியாவிலுள்ள ஷரியன் தேவானி, தென் ஆபிரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து பிஸ்டல் நகர பொலிஸ் நிலையத்தில் தானாக முன்வந்து சரணடைந்தார்.
அவரை படுகொலை சந்தேகநபராக கருதி தென் ஆபிரிக்க அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க பிஸ்டல் நகர பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
அவரை விசாரணைகளுக்காக தென் ஆபிரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு பிரித்தானிய அதிகாரிகள் தயாராகி வருகின்ற நிலையில், அவர் வெஸ்ட்மினிஸ்டர் நகர நீதவான் நீதிமன்றமொன்றில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
தன்னை படுகொலை சந்தேக நபராக குறிப்பிட்டு வெளியான அறிக்கையால் தான் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஷரியன் தேவானி கூறினார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஷரியன் தேவானியின் குடும்பத்தினர் விபரிக்கையில், “ஷரியன் மீது குற்றச் சாட்டு சுமத்தப்பட்டமை பைத்தியக்காரத்தனமானது. தன்னால் மிகவும் நேசிக்கப்பட்ட அந்தப் பெண்ணை அவர் ஏன் கொல்ல வேண்டும்? அவர் ஏன் தனது வாழ்வை தானே அழித்துக் கொள்ள வேண்டும்? என கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பில் அன்னியின் தந்தையான விநோத் ஹின்டோசா (வயது 61) விபரிக்கையில், “நீதிமன்றம் என்ன கூறப்போகிறது என்பது தொடர்பில் எமக்கு முன் கூட்டியே தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. அதனால் நீதிமன்ற உத்தரவு எமக்கு பெரும் அதிர்ச்சியை தருவதாக அமைந்தது'' என்று கூறினார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக