சேலை அணிந்து சென்றார்
அமெரிக்காவுக்கான இந்திய தூதராக மீரா சங்கர் என்ற பெண் அதிகாரி இருந்து வருகிறார். அந்த நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கருத்தரங்கங்களில் உரையாற்றுவது அவருடைய வழக்கம். இதுபோல, கடந்த 4-ந் தேதி அன்று மிசிசிபி நகருக்கு சென்று அங்குள்ள மிசிசிபி மாகாண பல்கலைக் கழகத்தில் உரையாற்றினார். மேலும், மிசிசிபி மேம்பாட்டு ஆணையத்துக்கு சென்று இந்தியர்களை சந்தித்தார். இதுதவிர, அந்த மாகாண கவர்னரையும் சந்தித்துப் பேசினார்.
பின்னர், பால்டிமோர் என்ற இடத்துக்கு செல்வதற்காக மிசிசிபி ஜாக்சன் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றார். அப்போது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மீரா சங்கரை தடுத்து நிறுத்தினார்கள். சேலை அணிந்து சென்றிருந்த அவரிடம் சோதனை போட வேண்டும் என தெரிவித்தனர்.
பெண் காவலர் சோதனை
உடனே, தான் இந்திய தூதர் என்றும் உயர் அதிகாரி என்றும் மீரா சங்கர் தெரிவித்தார். ஆனால், அதை அவர்கள் ஏற்கவில்லை. முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறையின் ஒரு பகுதிக்கு மீரா சங்கரை அழைத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து, மீரா சங்கரின் உடலில் ஏதாவது பொருளை மறைத்து வைத்திருக்கிறாரா என அறிவதற்காக அவருடைய உடல் முழுவதையும் பெண் காவலர் ஒருவர் தடவிப் பார்த்து சோதனை செய்தனர்.
அமெரிக்காவில் இந்திய தூதராக பணிபுரியும் பெண் அதிகாரிக்கே இத்தகைய நிலைமை ஏற்பட்டிருப்பது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த பாதுகாப்பு அதிகாரிகளோ, `மீரா சங்கர் சேலை அணிந்து வந்திருந்ததால், தனியாக அடையாளம் காணப்பட்டார். எனவே, சோதனை செய்ய வேண்டி இருந்தது' என தெரிவித்தனர்.
ஏற்கனவே, அமெரிக்காவுக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி பிரபுல் படேல் சென்றிருந்தபோது அவரிடம் குடியுரிமைத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதுவே முதல்முறை
மிசிசிபி விமான நிலையத்தில் இத்தகைய அவமரியாதை ஏற்பட்டதும், அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு இந்த தகவலை இந்திய தூதரகம் எடுத்துச் சென்றது. அமெரிக்காவில் பணிபுரியும் மீரா சங்கர், சேலை அணிந்தபடியே அந்த நாடு முழுவதும் சுற்றுவது வழக்கம். இப்போது தான், முதன் முறையாக இத்தகைய அவமரியாதைக்கு ஆளாகி இருக்கிறார்.
ஆனால், கடந்த நவம்பர் 1-ந் தேதி முதல் அமெரிக்க விமான நிலையங்களில் புதிய பரிசோதனை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால் இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா கண்டனம்
இதற்கிடையே, மீரா சங்கருக்கு ஏற்பட்ட அவமரியாதைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவு துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று டெல்லியில் பேட்டியளித்தபோது, "இத்தகைய நிகழ்வை இந்தியாவால் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த பிரச்சினையை அமெரிக்க அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம். மீண்டும் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாது என நான் நம்புகிறேன்'' என்று தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக