சனி, 20 நவம்பர், 2010

கடத்தப்பட்டவர்களுக்காக கப்பம் செலுத்தியும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை

காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட தமது உறவுகளை விடுவிப்பதற்காக நாம் பல ஆயிரங்களைக் கப்பமாகச் செலுத்தியும் எமது உறவுகள் இதுவரை எம்மிடம் வந்து சேரவில்லை. அவர்களை விடுவியுங்கள் அல்லது கண்டு பிடித்துத் தாருங்கள் என திருகோணமலை மாவட்டத்தில் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டோன் பெற்றோர் சங்கத்தினர் கண்ணீர் மல்க மன்றாடிக் கேட்டுள்ளனர்.

மேற்படி சங்கத்தினர் நேற்றுத் திருமலையில் மூன்று இடங்களில் இடம் பெற்ற சமய வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டபோதே இந்த உருக்கமான வேண்டுகோளை விடுத்தனர்.

இந்த வழிபாட்டு நிகழ்வுகள் அன்பு வழிபுரம் சகாயமாதா ஆலயத்திலும், ஞான வைரவர் ஆலயத்திலும், அபயபுர சந்தியிலுள்ள புத்தர் சிலைக்கு அருகிலும் இடம்பெற்றன.

தமது உறவுகள் காணாமல் போயும், கடத்தப்பட்டும் பல வருடங்களாகியும் இன்னும் அவர்கள் தொடர்பில் எமக்கு எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை. எமது உறவுகளை மீட்டுத் தருவதாகவும் கண்டு பிடிப்பதாகவும் கூறிய பலர் எம்மிடமிருந்து கப்பம் பெற்றிருந்தனர். ஆனால், எமது உறவுகளை இன்று வரை அவர்கள் மீட்டுத் தரவில்லை.

இன்று உறவுகளை இழந்ததுடன் எமது பணத்தினையும் இழந்து வாழ்கிறோம். வாடுகிறோம்.என அவர்கள் கண்ணீர் மல்க மனவேதனையுடன் தெரிவித்தனர்.

பங்குத் தந்தை உரை

அன்புவழிபுரம் சகாய மாதா ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வுகளின் பின்னர் உரையாற்றிய பங்குத் தந்தை ஏ.பெர்னாண்டோ, எங்களிடமோ ஏனையோரிடமோ உங் களது பிரச்சினைகள் குறித்துப் பேசி எதுவும் நடக்காது. நீங்கள் இறைவனிடமே உங்கள் பிரச்சினைகளைக் கூறுங்கள் அவர் உங்களுக்கு நிச்சயம் கருணை காட்டுவார் எனத் தெரிவித் தார்.

சங்கத் தலைவி உரை

திருகோணமலை மாவட்டத்தில் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டோரின் பெற்றோர் சங்கத்தின் தலைவி டேவிட் சகாயம் அங்கு உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடியதுடன் இரண்டாவது தடவைக்கான பதவிப் பிரமாணத்தையும் செய்துள்ளார். அவருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வேளையில் நாம் அவரிடம் ஒரு மன்றாட்டமான வேண்டு கோளை விடுக்கிறோம். காணாமல் போன கடத்தப்பட்ட எமது உறவுகளைக் கண்டு பிடித்து எம்மிடம் ஒப்படைக்க வேண்டும். இது ஜனாதிபதியைப் பொறுத்த வரையில் சிறிய விடயம் என்று கூறினார்.

மயங்கி விழுந்த தாய்
மத வழிபாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது ஒரு தாய் அங்கு மயங்கியும் விழுந்தார். அவர் தொடர்பில் விசாரித்தபோது அவர் தனது இரு பிள்ளைகளைப் பறி கொடுத்திருந்தார் என்பது தெரியவந்தது.

இதேவேளை, கண்ணீர் சிந்தியபடியே இவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது அந்தப் பிரதேசத்தில் மழையும் பெய்து கொண்டிருந்தது.

வழிவிட்ட சிங்கள மக்கள்
அபயபுர சந்தியிலுள்ள புத்தர் சிலைக்கு முன்னால் பிரார்த்தனையில் இவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு வந்த சிங்கள மக்கள் புத்தரின் சிலையை மூடியிருந்த கண்ணாடியைத் திறந்து வழிபடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருந்தனர். இந்த வழி பாட்டு நிகழ்வுகளில் தங்களது உறவுகளை இழந்த சுமார் 50 தமிழர்கள் கலந்து கொண்டனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல